கீழக்கரை பகுதியில் கழிவுநீர் கலப்பால் நிறம் மாறும் கடல்-நிரந்தர தீர்வுகாண அரசுக்கு வலியுறுத்தல்

கீழக்கரை :  கீழக்கரை நகரிலிருந்து தினந்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லிட்டர் கழிவுநீர் நேரடியாக கடலில் கலந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்நிலை தொடர்வதால் கீழக்கரை பகுதி கடலின் நிறம் இயற்கை தன்மையிலிருந்து மாறி விட்டது. எத்தனையோ நகராட்சி நிர்வாகங்கள் மாறினாலும், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதோடு தற்போது கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகிறது.

ஏற்கனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் இதுபோல் சாக்கடைநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. இதனால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல்நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருவதாக கடல்வாழ் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். கீழக்கரை பகுதி கடலில் நாளொன்றுக்கு 2 டன்னுக்கும் மேல் மீன்கள் பிடிபட்டு வந்தது. தற்போது படிபடியாக மீன் வளம் குறைந்து கொண்டே செல்கிறது. பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா பகுதி என்று பெயர் அளவில் மட்டுமே உள்ளது. கடல் மாசுபாட்டை தடுக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்காதது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது என கடல்சார் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரி, தண்ணீர் மற்றும் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணு உலைகளில் இருந்தும் மின்சாரம் தயாராகி வருகிறது. எனவே கழிவுநீரின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பம் உள்ளது. அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம். பின்னர் அது சுத்தமான நீராக மாற்றி அதை குடிநீராக பயன்படுத்த முடியும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆலோசனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை செயல்படுத்த வில்லை.

மக்கள் டீம் காதர் கூறியதாவது, கீழக்கரை நகரில் ஆண்டு கணக்கில் கழிவுநீர் கடலில் கலந்து வருகிறது. சில சமயம் குப்பைகள் கொட்டும் தளமாகவும் இப்பகுதி கடற்கரை மாறி வருகிறது. இதற்கு நிரந்த தீர்வு காண கடலில் கலக்கும் சாக்கடையை சுத்திகரித்து குடிநீராகவோ, விவசாய நீராகவோ பயன்படுத்த முடியும். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்றார்.

Related Stories: