ஜவ்வாதுமலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

போளூர் : திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், பழனிச்சாமி, மதன்மோகன் ஆகியோர், ஜவ்வாதுமலை தாலுகா, நம்மியம்பட்டு அருகே உள்ள மலையின் முகட்டில் பெருங்கற்காலத்தை சேர்ந்த வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதன்படி, மலை முகட்டில் கிழக்கு புறமாக அருகருகே உள்ள 2 குகை தளங்களில் 5க்கும் மேற்பட்ட வெண்சாந்து நிற ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

இதனை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது:நம்மியம்பட்டு பகுதியில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்டுள்ளது.  முதல் ஓவியத்தின் உருவத்தில் சில வடிவங்கள் ஒருங்கே உள்ளது. அது ஒருவனின் தலை அலங்காரமாக இருப்பது போலவும், அதே சமயம் ஒரு குறியீடு போலவும் உள்ளது. மேலும், இவ்வடிவத்தை வேட்டை தொடர்பான நிகழ்வுகளோடு பொருத்தியும் பார்க்கலாம்.

2ம் ஓவியத்தில் மனித உருவம்போல தோற்றம் கொண்ட வரைவு காணப்படுகிறது. அதில் கையை விரித்த நிலையில் இருப்பதுபோலவும், ஒரு கையில் ஏதோ ஒன்று வைத்திருப்பது போலவும் உள்ளது. 3ம் உருவத்தில் ஒரு மனித உருவம்,  நீண்ட தலைப்பாகை போன்ற தோற்றத்துடன் ஒரு கையில் ஆயுதம் ஒன்றை தூக்கிக்கொண்டு நடந்து செல்வதுபோல காணப்படுகிறது.

4ம் உருவத்தில் மனித உருவம்போல ஒன்று காணப்படுகிறது. ஒரு கையில் நீண்ட குச்சிபோன்ற ஆயுதம் வைத்திருப்பதுபோல உள்ளது.

அதற்குமுன் மிக அழிந்த நிலையில் மாடு போன்ற விலங்கின் தோற்றம் தெளிவற்ற நிலையில் காணப்படுகிறது.  கீழே மனித உருவம் போன்ற உருவம் கையில் குச்சி போன்ற ஆயுதம் தூக்கி நடந்தும் செல்வதுபோல உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஜவ்வாதுமலையில் அரியதாக காணப்படும் இந்த ஓவியங்கள் காலப்போக்கில் மழையின் காரணமாகவும், மக்களின் அறியாமையின் காரணமாகவும் சேதமடைந்துள்ளன. பழந்தமிழர்களின் வாழ்வியலுக்கு சான்றாக திகழும் இதுபோன்ற பாறை ஓவியங்களை வரும் தலைமுறைகள் காணும்வகையில் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: