செங்கம் பகுதியில் மந்தகதியில் நடக்கும் கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் சீரமைப்பு பணி-பொதுமக்கள் குற்றச்சாட்டு

செங்கம் : செங்கம் பகுதியில் சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன்கள் சீரமைப்பு பணி மந்தகதியில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செங்கம் பகுதியில் புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு பூமிக்கடியில் தகவல்தொடர்பு கேபிள் வயர்கள் மற்றும் சாத்தனூர் அணை கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன்கள் புதைக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் முன் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன்கள் உடைந்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுவரையில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கால்வாயில் கலந்து வீணாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல், கேபிள் வயர்கள் நீரில் மூழ்கி தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்யவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையில், செங்கம் பகுதியில் குடிநீர் தடையின்றி சப்ளை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது தொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த 13ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று முதல் சாத்தனூர் அணை கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் சீரமைக்கும் பணி தொடங்கியது.

ஆனால், இப்பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. பணிகள் நடைபெறும் இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நேரில் வந்து பார்வையிடவில்லை என கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் இதனை பார்வையிட்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: