×

சிவகங்கை, திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 2 பேர் பலி-போலீஸ் உட்பட 125 பேர் காயம்

சென்னை : சிவகங்கை மற்றும் திருச்சி அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் பலியாகினர். சிவகங்கை அருகே கண்டுபட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் மத நல்லிணக்க பொங்கல் விழா, நேற்று முன்தினம் நடந்தது. அனைத்து மக்களும் நேர்த்திக்கடன் வைத்து அந்தோணியார் கோயில் முன் பொங்கலிட்டனர்.  இதையடுத்து, கண்மாய் மற்றும் பொட்டல் பகுதியில் காலை 10 மணியில் இருந்தே காளைகள் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்ட காளைகளை பிற்பகல் 2 மணி வரை அவிழ்த்து விட்டனர். பிற்பகல் 2.30 மணியளவில் அந்தோணியார் கோயிலில் வழிபாடு, பூஜை முடித்து கோயில் காளை உள்பட 74 காளைகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டை ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டை காண வந்திருந்த அனைவரையும் கண்டுப்பட்டி கிராமத்தினர் தங்கள் வீடுகளுக்கு அழைத்து உணவளித்தனர். மஞ்சுவிரட்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாகனேரியை சேர்ந்த மலைச்சாமி (56) என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார். 80 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 19 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

திருச்சி: திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மாதாகோயில் அருகே உள்ள மந்தையில் நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. 490 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 370 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அடக்க முயன்ற போது காளை முட்டி திருச்சி வண்ணாங்கோவில் பாரதிநகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் வினோத்குமார் (27) என்பவர் உயிரிழந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் காசிநாதன் உட்பட 45 பேர் காயமடைந்தனர்.


Tags : Sivagangai, Trichy , Chennai: Two persons were killed in a bullfight at Jallikattu near Sivagangai and Trichy yesterday. Kandupatti near Sivagangai is sacred
× RELATED தேர்தல் விதிமுறைகள் மீறி விழா: அதிமுக மாஜி அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்கு