ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான ஐந்து புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.1.2022) தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

சென்னைப் பெருநகர நுகர்வோர்களுக்கு தேவையான பாலை பதப்படுத்தவும், சிப்பங்கட்டாகவும், விநியோகிக்கவும், சென்னை பெருநகரத்தில் மாதவரம், அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணைகள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வருகின்றன. இந்தப் பால் பண்ணைகள் தவிர அம்பத்தூரில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, திருவண்ணாமலையில் பால் மற்றும் பால் பவுடர் தொழிற்சாலை, உதகமண்டலத்தில் கருவூலக ஜெர்சி மற்றும் பொலிகாளைப் பண்ணை, ஈரோட்டில் எருமை உறை விந்து நிலையம் மற்றும் பால் கறவையின மேம்பாட்டு திட்ட அலுவலகம் ஆகியவையும் இணையத்தின் சொந்த அலகுகளாக செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், ஆவின் உற்பத்தி பொருட்கள் இலாபம் ஈட்ட வழிவகைகளை ஆராய வலியுறுத்தியதன் அடிப்படையில், ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய உப பொருட்களை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில், கீழ்க்காணும் ஐந்து புதிய பொருட்களை முதலமைச்சர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

பிரீமியம் மில்க் கேக்

ஆவின் நிறுவனம் தற்போது பால்கோவா, மைசூர்பா, ரசகுல்லா மற்றும் குலாப்ஜாமுன் போன்ற இனிப்பு பொருட்களை நுகர்வோர்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இனிப்பு பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரீமியம் மில்க் கேக் தயாரித்து 250 கிராம் ரூ.100/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த இனிப்பு வகை தரம் மிகுந்த பால் பவுடர் மற்றும் ஆவின் அக்மார்க் நெய் உபயோகித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்)

இளைஞர்களை கவரும் வகையில் யோகர்ட் பானம் மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் தயாரிக்கப்பட்டு 200 மி.லி. அளவு கொண்ட பாட்டில் ரூ.25/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஜீரண சக்தி மேம்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாயாசம் மிக்ஸ்

ஆவின் நுகர்வோர் தேவையை அறிந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் எளிமையாக பாயாசம் தயாரிக்கும் வகையில் பாயாசம் மிக்ஸ் 100 கிராம் ரூ.50/- மற்றும் 200 கிராம் ரூ.100/- என்ற அளவில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய பாயாசம் மிக்ஸ் குழந்தைகளை கவரும் வகையில் மிகுந்த சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாயசம் மிக்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாதம், முந்திரி, திராட்சை மற்றும் பால்பவுடர் ஆகிய பொருட்களை கொண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பால் புரத நூடுல்ஸ்

நுகர்வோர்களின் குறிப்பாக வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் குழந்தைகள் விரும்பி சுவைக்கக்கூடிய பால் புரத சத்து மிகுந்த நூடுல்ஸ் 70 கிராம் ரூ. 10/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

டெய்ரி ஒய்ட்னர்

அவசர பால் தேவைக்கு உடனடியாக தயாரிக்கும் வகையிலும், உணவகங்கள், தேநீர் கடைகள், விடுதிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தேவையினை கருத்தில் கொண்டும் பயணங்களின் போது எளிதாக எடுத்து செல்லக்கூடிய டெய்ரி ஒய்ட்னர் புத்தம் புது வடிவில், 20 கிராம் ரூ.10/-, 200 கிராம் ரூ.80/- மற்றும் 500 கிராம் ரூ.200/- என்ற விலையில் ஆவின் டெய்ரி ஒய்ட்னர் அறிமுகப்படுத்தப்படுகிறது.

Related Stories: