சர்ச்சைக்குரிய குழந்தைகள் நிகழ்ச்சி... தனியார் சேனலுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்: பாஜக புகாரின் மீது நடவடிக்கை!

டெல்லி : சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நடத்திய தனியார் தமிழ் சேனலுக்கு, ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  அண்மையில் தனியார் தமிழ் சேனலில், குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில், புலிகேசி மன்னர் போன்ற வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தது. அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தன.இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது.

இவ்வாறு பிரதமர் மோடியை மறைமுகமாக சாடியதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் முருகன் அவர்களிடம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.இந்நிலையில், பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தனியார் தமிழ் சேனலுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசில் ஜனவரி 15ம் தேதி அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: