வேடசந்தூர் அருகே சோகம் போலீஸ் ரோந்து ஜீப் மீது பைக் மோதி வாலிபர் பலி-இறுதிச்சடங்கிற்கு வந்த பாட்டி டூவீலர் மோதி சாவு

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே போலீஸ் வாகனத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அய்யலூர் அருகே முடக்குப்பட்டியை சேர்ந்தவர் ராமன் மகன் முத்து (22). திருப்பூரில் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் முடக்குப்பட்டியில் இருந்து அய்யலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடவூர் பிரிவு அருகே நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து ஜீப் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.

முத்து சென்ற பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஜீப்பின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் ஆத்திரமடைந்த முத்துவின் உறவினர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ், வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இதனிடையே, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று முத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்ற உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, திண்டுக்கல் - திருச்சி தேசிய நான்கு வழிச்சாலை தங்கம்மாபட்டியில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதிச்சடங்கிற்கு வந்த பாட்டி சாவு

முத்துவின் பாட்டி பழனியம்மாள் (65), திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் வசித்து வந்தார். இவர் நேற்று முத்துவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தங்கச்சியம்மா பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: