இவள் பாரதி

நன்றி குங்குமம் தோழி

A MAN WHO EXISTS   IN BETWEEN A MALE & FEMALE  IS  ALSO HUMAN  BEING

திருநங்கைகளுக்கான அங்கீகாரம் என்பது சும்மா கிடைத்துவிடவில்லை. நிறைய வலி, போராட்டம், புறக்கணிப்பு, அடி, மிதி, குடும்பத்தை விட்டு வெளியேறல், சமூக வெறுப்பு, தனிமை, அழுகை, ரோட்டில் உட்காருதல் என அத்தனையும் தாண்டியே கிடைத்தது. பத்தே நிமிடத்தில் திருநங்கைகள் உணர்வை குறும்படமாகப் பதிவு செய்து நடித்திருக்கிறார் குணச்சித்திர நடிகர் கோபி. யார் இந்த கோபி என்கிறீர்களா? ஆடை படத்தில் ஆடையின்றி தவிக்கும் அமலாபாலைப் பார்த்து எதிர் பில்டிங்கில் இருந்து இறங்கி உள்ளே வரும் ஐ.டி. இளைஞனாக நடித்தவர்தான் கோபி “ஆம்பளைப் பிள்ளையப் பெத்துட்டேன்னு சந்தோசப்பட்டேன், பொட்டச்சி மாதிரி வந்து நிக்கிறியே எனும் அப்பாவின் அதிகாரக் குரலும், என்னடா நீ ஒரு மாதிரிப் பேசுற, ஒரு மாதிரி நடந்துக்குற, எங்கள கேவலப்படுத்தீராதடா’’ எனக் கதறும் அம்மாவின் குரலும் பின்னணியில் ஒலிக்க… பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண் உடை தரித்த திருநங்கை பாரதி வழியே குறும்படம் நகர்கிறது.

பாரதி பாலியல் தொழில் செய்யும் பெண்ணால் முதலில் உதாசீனப்படுத்தப்படுவதும், தொடரும் சம்பவங்களால் அவர்களுக்குள் நல்ல நட்பும் புரிதலும் வர, திருநங்கைகளின் நிலையை உணர்வுகளால் பதிவு செய்கிறார் பாரதி. முடிவில் பாலியல் தொழிலாளி திருநங்கை பாரதியை சகோதரியாய் ஏற்று கட்டியணைக்க, தன்னைப் பெண்ணாக அவர் ஏற்றுக்கொண்டதை அதீத மகிழ்ச்சியினால் உணர்வாக வெளிப்படுத்தும் பாரதி, மாற வேண்டியது இந்த சமுதாயம்தான் என குறும்படத்தை முடித்து வைக்கிறார். ஆண் தன்னை ‘ஆண்’ என்றும், பெண் தன்னை ‘பெண்’ என்றும் நினைப்பதும், ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தான் இல்லாமல், இடை நிலை தோற்றத்துடன் இருப்பதும், கரு உருவாகும்போது ஏற்படும் பிறப்பியல் பிறழ்வுகள்.

இந்தப் பிறழ்வுகளோடு குழந்தை யார் வீட்டிலும் பிறக்கலாம். யார் வேண்டுமானாலும் இப்பிரச்சனையைச் சந்திக்கலாம். உடற்கூறின் குளறுபடிகளைப் புரிந்து, குழந்தைகளை புறந்தள்ளாமல், ஆதரவு காட்டி, அரவணைத்து, சரியான பாதையில் அழைத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு பெற்றோரில் ஆரம்பித்து, ஆசிரியர், நட்பு, சமுதாயம் என அனைவருக்கும் உண்டு. அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையினை அவர்கள் வாழ அனுமதியுங்கள். ஒரு குழந்தை தன் பாலினம் சார்ந்த குழப்பத்தோடு, குடும்பத்தில் இருப்பதைவிட தன் பிள்ளைக்கு என்ன வேண்டும் எனப்பார்த்து பெற்றோர்கள் அமைத்துக கொடுத்து அவர்களையும் சமமாக நடத்தினால் பிரச்சனையில்லை.

பாலினப் பிரச்சனை அவர்களுக்குத் தெரியவரும்போது, எப்படி என் குடும்பத்தில் இதைச் சொல்வேன், எப்படி இந்த சமூகத்திற்கு இதைப் புரியவைப்பேன், அதை அவர்கள் எப்படி எடுப்பார்கள் என்பதே அவர்களுக்கு முக்கியப் பிரச்சனையாக உள்ளது. மிகச் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இக் குறும்படத்தை நடிகர் சிவக்குமார், இயக்குநர்கள் மீரா கதிரவன், பா.இரஞ்சித், அஜயன் பாலா போன்றவர்கள் பார்த்து வெகுவாக பாராட்டியதோடு, திருநங்கைகளின் ‘டிரான்ஸ் பிலிம் விருதை’ வென்றிருக்கிறது.

மூன்றாம் பாலினம் காரணம் என்ன..?

மனித உடலின் பாலினம் தீர்மானமாவது, மரபணுக்கள் அதைத் தாங்கியுள்ள குரோமோசோம்களின் அமைப்பு மற்றும் அதன் அளவினைப் பொறுத்தது. ஆணின் விந்துவான அந்த ஒரு செல் உயிரியில் X ம், பெண்ணின் ஒரு செல் உயிரியான முட்டையில் உள்ள X ம் இணைந்து XX குரோமோசோம் உருவானால் அந்த கருமுட்டை  பெண்ணாக வளரும். ஆணின் Y ம் பெண்ணின் X ம் இணைந்து XY குரோமோசோமாக உருவானால் கருமுட்டை ஆணாக வளரும்.

பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்து முழு பாலின அடையாளம் பெறுவதில் பின்தங்கியவர்களான  (“disorders of sex development” - DSD)  இவர்களுக்கு பெண்ணுக்கான ஹார்மோன் ஆணிடமும், ஆணுக்கான ஹார்மோன் பெண்ணிடமும் மிகைக்கும் குளறுபடி நடக்கிறது. இங்கே பிரச்சினைக்குரிய Genotype எது என்றால், “ 47-XXY .’’ இவர்கள்தான் நம் தேடலுக்குரியவர்கள்.

ஆண்களுக்கு XY என்று இருக்க வேண்டியதற்கு பதிலாய், 23-வது “ஜோடி” குரோமோசோம்கள் “ XXY ’’ என்று இருந்தால் அது ஒரு “பிறவிக் குறை” (genetic birth defect). பெரும்பான்மையினருக்கு பேச்சு, நடை, நடவடிக்கை, செயல், குரல், முகமாற்றம், மார்பக வளர்ச்சி போன்றவை ஆண் போன்றல்லாமல் பெண் போன்று தோற்றமளிக்க இதை ‘Klinefelter syndrome’ என்றும் கண்டுபிடித்து சொன்னவர், 1942-ல் Dr.Harry Klinefelter என்கின்றனர் அறிவியலாளர்கள். புற உலகின் கண்ணுக்குப் புலப்படாத இந்தக் குறைபாடு, பொது வெளிச்சமூகத்திடமிருந்து இவர்களை தூரமாய் தள்ளி வைக்கின்றது. சமுதாய சூழ்நிலையை பொறுத்து மனதளவிலும் முழுமையான ஆணாக இவர்களை முதிர்ச்சி அடைய விடுவதில்லை. சமுதாயம் கேலியும் கிண்டலும் செய்து புறக்கணிக்கும்போது, நாம் ஏன் பெண்ணாகவே மாறிவிடக்கூடாது என முடிவு செய்து, “XXY-ஆண்கள்”  காணாமல் போய் ‘மூன்றாம் பாலினத்தவர்’  உருவாகுகிறார்கள்.

நடிகர் கோபி

திருநங்கைகள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘இவள் பாரதி’ குறும்படத்தில் திருநங்கை கதாப்பாத்திரத்தில் பெண்ணாக நினைத்து நடித்தது ரொம்பவே உணர்வுப்பூர்வமாக இருந்தது. நடிப்புதான் எனக்கு பிடித்த விசயம். கல்லூரியில் படிக்கும்போதே புகைப்பட ஆல்பத்தோடு சினிமாவில் நடிக்க வாய்ப்பைத் தேடி அலைந்தேன். குடும்ப சூழலால் வேலை தேடி துபாய் செல்ல நேர்ந்தது. ஒரு சில நிறுவனங்களில் கடைநிலை ஊழியர் பணி கிடைக்க, நான்கு ஆண்டு வாழ்க்கை போராட்டமாய் கழிந்தது. கொஞ்சம் பணத்தைச் சேர்த்து, துபாய் ஃபிலிம் கிளப் நிறுவனத்தில் இணைந்து நடிப்பையும், இயக்கத்தையும் சேர்த்துக் கற்றுக் கொண்டேன். வெளிநாட்டு மண்ணில் எனக்கு நேர்ந்த அனுபவங்களை கதையாக மாற்றி ‘திசை அறியா’ எனும் குறும்படத்தை இயக்கி வெளியிட்டேன்.

துபாயில் நடந்த குறும்படத்திற்கான போட்டியில் பங்கேற்று, சிறந்த குறும்படம் மற்றும் சிறந்த நடிகர் விருதுகளை நடிகர் மோகன்லால் கைகளால் கிடைக்கப் பெற்றேன். தொடர்ந்து காமெடி நடிகர் சந்தானத்தோடு இணைந்து ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஒரு சில பிரச்சனைகளால் அந்தப்  படம் வெளியாகவில்லை. நடிப்பின் மேலிருந்த ஆர்வம் குறையாததால், வாய்ப்புக்காக குடும்பத்தோடு சென்னை வந்துவிட்டேன். தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, விஜய் சேதுபதியுடன் 96, விஷாலுடன் இரும்புத்திரை, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, மேயாதமான், ஆடை படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்துள்ளேன். இன்னும் சில படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந்திருக்கிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>