வேலைக்கு பெற்றோர் போக சொன்னதால் ஆத்திரம் கோயில் கோபுர உச்சியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்-கரூரில் நள்ளிரவில் பரபரப்பு

கரூர் : வேலைக்கு பெற்றோர் போக சொன்னதால் ஆத்திரத்தில் கோயில் கோபுர உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் கரூரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் மேற்புறம் மின்விளக்கு பொருத்தப்பட்ட கோபுரம் உள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11மணியளவில் 20வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், 35 அடி உயர கோபுர உச்சியில் ஏறினார்.

 பின்னர் மின்விளக்கு கம்பத்தை பிடித்துக்கொண்டு கீழே குதிக்க போவதாக அந்த வாலிபர் கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாலிபரை கீழே இறங்கும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபர் இறங்க வில்லை.இதுதொடர்பாக பொதுமக்கள், தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வாலிபரிடம் பேச்சு கொடுத்து கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபர், தான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கரூர் தீயணைப்புத்துறையினர் கோயில் கோபுர உச்சிக்கு ஏறி சென்றனர். பின்னர் அந்த வாலிபரை நள்ளிரவு 12 மணியளவில் பத்திரமாக மீட்டு கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், தாந்தோணிமலை குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜா மகன் ரஞ்சித்(21) என்பதும், வேறு மாவட்டத்துக்கு சென்று வேலை பார்க்கும்படி பெற்றோர் தன்னிடம் வற்புறுத்துகின்றனர். எனக்கு வேறு மாவட்டத்துக்கு செல்ல பிடிக்கவில்லை. அதனால், இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், ரஞ்சித்தின் குடும்பத்தினரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், ரஞ்சித்தை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: