புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தைப்பூசத் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டுக்கள் நடைபெறக்கூடிய இடமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டி இந்த ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள மலையக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோன்று இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி புலமங்கலம் நாட்டார்கள் தொழுவத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 500 காளைகள் 150 மாடுபிடி வீரர்கள் என கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி 3 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 காளையர்கள் என களம் காண உள்ளனர். மேலும் இந்த போட்டியை காண்பதற்காக சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களுக்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றிபெறக்கூடிய காளையர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள், தங்க காசுகள், வெள்ளிக்குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

Related Stories: