ரூ.440 கோடிக்குமேல் சொத்து வைத்துள்ள சிஇஎல் நிறுவனத்தை ரூ.210 கோடிக்கு விற்க முயற்சி: கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய அரசு

புதுடெல்லி: சுமார் ரூ.440 கோடிக்கு மேல் மதிப்புடைய மத்திய எலக்ட்ரானிக் லிமிடெட் (சிஇஎல்) நிறுவனத்தை ரூ.210 கோடிக்கு  விற்க முயன்ற ஒன்றிய அரசு முயற்சி, தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் செயலில் பாஜ தலைமையிலான ஒன்றிய தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம், எல்ஐசி என லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை கூட விற்பனை செய்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் கடைசியாக சேர்ந்திருப்பது, சிஇஎல் எனப்படும் மத்திய மின்னணு நிறுவனம் (சிஇஎல்). சிஇஎல் நிறுவனத்தை தனியார் மயமாக்க முடிவு செய்த ஒன்றிய அரசு, இதற்கான அறிவிப்பைக் கடந்த வாரம் வெளியிட்டது. நிதி ஆயோக் பரிந்துரை அடிப்படையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தொழிலாளர் சங்கங்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. லாபம் ஈட்டும் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் செயல் கண்டிக்கத்தக்கது எனவும், இந்த முடிவை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. சோலார் செல் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் இந்த நிறுவனம், பாதுகாப்பு துறைக்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் உள்ளது. உ.பியில் உள்ள அரசின் வழிகாட்டு மதிப்பு அடிப்படையில் மட்டுமே கணக்கிட்டால் கூட சுமார் ரூ.440 கோடி மதிப்புடையதாக உள்ளது. நிறுவன கட்டிடம், வசதிகள், தொழிற்சாலை உபகரணங்கள் என அனைத்தையும் கணக்கிட்டால், நிறுவன மதிப்பு எங்கேயோ போய்விடும்.

இந்த நிறுவனத்தை நந்தல் லீசிங் மற்றும் பைனான்ஸ் நிறுவனத்துக்கு விற்க முயற்சி நடந்துள்ளது. இந்த பைனான்ஸ் நிறுவனம் திவாலான நிறுவனம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிறுவனத்திடம்தான், சிஇஎல் நிறுவனம் கைமாற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர் சங்கங்கள் கொதித்துப்போனது ஒரு புறம் இருக்க, நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரையை எதிர்த்து, ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் நிதி ஆயோக்கிற்கு கடிதம் எழுதினார். இதுமட்டுமின்றி, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறை செயலாளர், அறிவியல் அறிஞர் சேகர் சி மாண்டே ஆகியோரும், நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இந்த நிறுவனம் லாபத்தை ஈட்டி வருகிறது. கடந்த சுமார் 5 ஆண்டுகளாகவே லாபம் அதிகரித்து வருகிறது. இழப்பு அனைத்திலிருந்தும் மீண்டு, இதன் நிதி நிலை, லாபம் உயர்ந்து வருகிறது எனவும் நிதி ஆயோக்கிற்கு எழுதப்பட்ட எதிர்ப்பு கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவன தொழிலாளர் சங்கங்கள் தரப்பிலும், அறிவியல் அறிஞர்கள் சிலரும் கூறியதாவது: சிஇஎல் என்ற நிறுவனத்தின் நில மதிப்பு மட்டும் சுமார் ரூ.440 கோடி. இதனை வெறும் ரூ.210 கோடிக்கு விற்பது என்பது, ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கும் திட்டத்தின் மிக மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறது.  ரயில்வே, பாதுகாப்பு துறை உட்பட பலவற்றிலும் முக்கிய பங்களிக்கும் அத்தியாவசிய துறை சார்ந்த நிறுவனமாக இது உள்ளது. சாதாரண தனியார் நிறுவனங்களின் கையில், நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது . இவ்வாறு அவர்கள் கூறினர். தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பணிந்த ஒன்றிய அரசு இந்த விற்பனையை திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டாலும், விற்கும் முயற்சியை ஒன்றிய அரசு இன்னும் கைவிட்டதாக தெரியவில்லை என, தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

* சிஇஎல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் 2,02,000 சதுர மீட்டர்

* நில மதிப்பு மட்டும் சுமார் ரூ.440 கோடி

* அடிப்படை விலை நிர்ணயம் நில மதிப்பில் 20 சதவீதம்

* விற்க திட்டமிடப்பட்ட தொகை சுமார் ரூ.210 கோடி

* பங்குச் சந்தை மதிப்பு ரூ.957 கோடி

* வளர்ச்சியுடன் கூடிய உத்தேச மதிப்பு ரூ.1,300 கோடி - ரூ.1,600 கோடி

* ஏலத்தில் பங்கேற்றது 2 நிறுவனங்கள் தானா?

நாட்டின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான சிஇஎல்-ஐ ஏலம் எடுக்க நந்தல் பைனான்ஸ் அண்ட்  லீசிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜெபிஎம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவைதான் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அடிமாட்டு விலைக்கு விற்க உத்தேசித்துள்ள விலையை  ஒட்டிதான் ஏலம் கேட்டுள்ளன. அதாவது, நந்தல் பைனான்ஸ் ரூ.194 கோடிக்கும் ஜெபிஎம் இன்டஸ்ட்ரீஸ் ரூ.190 கோடிக்கும் ஏலம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* பங்குச்சந்தை மதிப்பு மட்டும் ரூ.957 கோடி

சிஇஎல் நிறுவனத்தை பங்குச்சந்தை மதிப்பு அடிப்படையில் தோராயமாக கணக்கிட்டால் கூட சுமார் ரூ.957 கோடியாக உள்ளது. அதேநேரத்தில், நிலம் மட்டுமின்றி, கட்டிட மதிப்பு, கடந்த கால வளர்ச்சியின் அடிப்படையில் கணக்கிடப்படும் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டால், குறைந்த பட்சம் சுமார் ரூ.1,300 முதல் ரூ.1,600 கோடியாக இருக்கும். கடந்த 2020-21 நிதியாண்டில் இந்த நிறுவனம் நிகர விற்பனையாக ரூ.296 கோடிக்கு மேற்கொண்டுள்ளது. நிகர லாபமாக ரூ.136 ஈட்டியுள்ளது.

* ரூ.1,592 கோடிக்கு ஆர்டர் ரூ.730 கோடி லாபம் வரும்

  கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதிப்படி கணக்கிட்டால் கூட, இந்த நிறுவனத்திடம் சுமார் ரூ.1,592 கோடி மதிப்புக்கு ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு நிகர லாபமாக சுமார் ரூ.730 கோடி கிடைக்கும். அதாவது, அரசுக்கு ரூ.730 கோடி லாபம் ஈட்டும் அளவுக்கு ஆர்டர் பெற்றுள்ள நிறுவனத்தைதான், அடிமாட்டு விலைக்கு விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என, அகில இந்திய  காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் தெரிவித்துள்ளார். ‘இது ஆண்டு இறுதி (தள்ளுபடி) விற்பனை’ எனவும் அவர் வர்ணித்துள்ளார்.

 

* 10 ஊழியர்கள் கூட இல்லாத நிறுவனத்துக்கு கைமாறுவதா?

சிஇஎல் நிறுவனத்தை ஏலம் எடுக்க விண்ணப்பித்துள்ள நந்தல் நிறுவனத்தில் 10 ஊழியர்கள் கூட இல்லை. அதுவும், இந்த நிறுவனம் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இதுவும் பர்னிச்சர் மற்றும் இன்டீரியர் நிறுவனத்தின் கிளை நிறுவனம். இது மட்டுமின்றி, நந்தல் பைனான்ஸ் லிமிடட்டுக்கு எதிராக, தேசிய கம்பெனிகள் சட்ட  தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: