நாகை கோடியக்கரையிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1 கோடி கஞ்சா மூட்டைகள் பறிமுதல்: 3 மாநிலத்தை சேர்ந்த 9 பேர் கைது

நாகை: கோடியக்கரையிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த நாகை தனிப்படை போலீசார், 3 மாநிலத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் சர்வதேச கடத்தல் கும்பல் கஞ்சா கடத்த உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகை எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, வேதாரண்யம் புதுப்பள்ளி பாலம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக கேரளா மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று செல்ல, அதை பின்தொடர்ந்து ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட கார் வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், 2 கார்களையும் மடக்கி பிடித்தனர். அதில் வந்த 6 நபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 2 காரிலும் கடும் சோதனை செய்தனர். இதில் ஆந்திரா மாநில காரின் டிக்கியில் மூட்டை, முட்டையாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த 6 நபர்கள் மற்றும் 2 கார்களுடன் கஞ்சா மூட்டைகளையும் தனிப்படை போலீசார் நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

விசாரணையில், காரில் கடத்தி வரப்பட்ட 170 கிலோ கஞ்சாவை 85 பொட்டலங்கள் போட்டு கொண்டு வந்ததும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

காரில் வந்தவர்கள் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த அனிஸ் (38), நாகராஜ் (40), கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில்குமார் (30), அக்க்ஷய் (30), உத்தப்பன் (40), சீனு பிரைட் (35) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு படகு மூலம் கடத்த உடந்தையாக இருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (30), பிரபாகர் (40), சுந்தர்ராஜன் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 கோடி.

Related Stories: