ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இம்மாத ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் தோறும் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்பட்டுத்த கட்டுப்பாடுகளை அரசு தீவிரமாக்கி வருகிறது. அரசின் விதிமுறைகளை மக்கள் சரிவர கடைபிடித்தால் அடுத்து வரும் 2 வாரங்களில் தொற்றின் பரவலை பாதியாக குறைக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதேபோல், கடந்த ஒரு வாரமாக பாதிப்பு ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. அந்தவகையில், கடந்த 13ம் தேதி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து, 14ம் தேதி 23,459 ஆகவும், 15ம் தேதி 23,989 ஆகவும் இருந்தது. இந்தநிலையில், 16ம் தேதி 23,975 ஆகவும், நேற்று முன்தினம் 23,443 ஆகவும் குறைந்தது. இரண்டு நாட்கள் குறைந்திருந்த நிலையில் தொற்று பாதிப்பு நேற்று சற்று அதிகரித்து 23,888 ஆக பதிவாகியது. தொற்றால் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வந்தாலும் சிகிச்சை பெற்று குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 15,036 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.  

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,41,562 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23,888 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை 1,61,171 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 15,036 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் நேற்று உயிரிழந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: