இதுவரை இல்லாத புதிய உச்சம் புதுவையில் ஒரே நாளில் 2,093 பேருக்கு கொரோனா: இளம்பெண் உள்பட 3 பேர் பலி

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 2093 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இளம்பெண் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 6,028 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-1,715, காரைக்கால்-279, ஏனாம்- 54, மாகே- 45 என மொத்தம் 2,093 (34.72 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 81 வயது, 59 வயது முதியவர்கள், 32 வயது இளம்பெண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021 மே 11ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,049 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ஜன.31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று கடந்த 9ம் தேதி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். தொடர்ந்து, 10 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வந்தன. இதற்கிடையே தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கல்வித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நடத்திய ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்றிலிருந்து (நேற்று) ஜன.31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

Related Stories: