கொரோனா தொற்று எண்ணிக்கை திடீர் சரிவு பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைவாக நடத்தப்படுவதால் ஒன்றிய அரசு கவலை அடைந்துள்ளது. பரிசோதனையை தீவிரப்படுத்தும்படி மாநிலங்களை வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாறிய ஒமிக்ரான் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் தீவிர தாக்கம் பிப்ரவரி 2வது வாரத்தில் இருக்க கூடுமென மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 2 வாரத்தில் மட்டுமே 1200 சதவீதத்துக்கு மேல் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதே நேரம், பல மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைவாக நடத்தப்படுவதாக ஒன்றிய  அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அது கவலை அடைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேர் தொற்றால் பாதித்துள்ளனர். மேலும்,  310 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒமிக்ரான் வைரஸ் மிகவும் தீவிரமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணைய தளத்தில் உள்ள தரவுகளின் மூலம், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஐசிஎம்ஆர் கடந்த 10ம் தேதி வெளியிட்ட ஆலோசனைகளில் கூட, தொற்று பாதித்தவர்களை விரைந்து கண்டறிந்து தனிமைப்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது.

மேலும், பரிசோதனைகளின் மூலமே தொற்றின் தீவிர தாக்கம் உள்ள பகுதி, புதிதாக தொற்று பரவும் பகுதிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, புதிய கட்டுப்பாட்டு பகுதி அறிவித்தல், பரவுதலை அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த முடியும். இதன் மூலம், மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கொரோனா பரவலை தடுக்கலாம். மேலும், இறப்பு, மக்கள் நோயினால் பாதிக்கப்படுவதை குறைக்கலாம். தொற்று தீவிரமாக பாதிப்பதையும் தவிர்க்கலாம். எனவே, தொற்றுநோய் பரவுவதை திறம்பட கண்காணிக்கவும், உடனடியாக மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை தொடங்கப்படுவதையும் உறுதி செய்ய கொரோனா பரிசோதனையை மேம்படுத்துவது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கடமையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* 2 வாரம் இருமல் இருந்தால் காசநோய் பரிசோதனை

கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு குணமான பிறகும் கூட, பல்வேறு பின்விளைவுகள் தொடர்கின்றன. 2 அல்லது 3 வாரங்களுக்கு தொடர்ந்து இருமல் இருந்து வருகிறது. இது போல் தொடர்ந்து இருமல் இருந்தால்,  அவர்கள் தங்களை காசநோய் (டிபி) பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரா அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

* 50 லட்சத்தை கடந்த பூஸ்டர் டோஸ்

ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டரில், `மற்றொரு நாள், மீண்டும் ஒரு வெற்றி. ஜனவரி 10ம் தேதியில் இருந்து 50 லட்சம் சுகாதாரம், முன்களப் பணியாளர்கள், 60 வயது அதற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் பெற தகுதியுள்ள அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டு கொள்ள கேட்டுக் கொள்கிறேன். மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்திய எண்ணிக்கை 158.04 கோடியாக உள்ளது,’ என்று கூறியுள்ளார்.

* சீனாவுக்கு பார்சலில் வந்த ஒமிக்ரான்

சீன அரசின் ஊடகம் வெளியிட்ட செய்தியில், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வந்த பார்சல்களின் மூலம் ஒமிக்ரான் தொற்று பீஜிங், பிற இடங்களில் பரவி இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாக கூறப்பட்டுள்ளது.

* சந்திரபாபுவுக்கு கொரோனா

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபுவுக்கு சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா இருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தன்னுடன் பழகியவர்களும் பரிசோதனை செய்துகொண்டு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் பூரண குணமடைய முதல்வர் ஜெகன் மோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* தடுப்பூசி கட்டாயத்தை எதிர்த்து வழக்கு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு

கொரோனா பாதுகாப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தடுப்பூசி முக்கியமானது என்று ஒன்றிய அரசு கூறி வருகிறது. அதனால், தடுப்பூசி போடும்படி மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும். அதனால் கட்டாயப்படுத்தும் மாநிலங்களுக்கு நீதிமன்றம் தடை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை இந்த மாதம் இறுதியில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: