குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெறாது: ஒன்றிய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: குடியரசுத் தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் வரும் 26ம் தேதி முப்படைகள் மற்றும் மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம் பெற உள்ளன. ஆனால், இந்தாண்டு அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்படும் அலங்கார ஊர்திக்கு ஒன்றி அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், விழாவில் பங்கேற்கும் சர்வதேச பிரதிநிதிகளுக்கு இவர்களை யார் என தெரியாது என்பதால், அணிவகுப்பில் இருந்து தமிழக அரசின் ஊர்தி நீக்கப்படுவதாக ஒன்றிய அரசு காரணம் தெரிவித்தது. இதற்கு, தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும்  கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக ஊர்தியை அனுமதிக்கும்படி பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியரசுத் தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களின் ஊர்திகள் இடம் பெறாது. அது குறித்து மறுபரிசீலனையும் செய்ய முடியாது. அனைத்து விவரங்களும் முறையாக மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. மேலும், அணிவகுப்புக்கான பணிகளும் தற்போது இறுதியாகி விட்டது,’ என கூறப்பட்டுள்ளது.

* முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் விளக்க கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘விதிமுறைகளின் அடிப்படையில்தான் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படுகிறது. முதல் மூன்று சுற்றுக்கள் வரை தமிழக ஊர்தி பரிசீலனையில் இருந்து வந்தது. இறுதி பட்டியலில்தான் அது இடம் பெறவில்லை. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. கடந்த 2017, 2019 மற்றும் 2021ம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திகள் இடம் பெற்றுள்ளன,’ என கூறியுள்ளார்.

Related Stories: