வேட்பாளர்களின் குற்ற பின்னணியை வெளியிடாத கட்சிகள் அங்கீகாரம் ரத்தாகுமா? உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு

புதுடெல்லி: பொதுவெளியில் தங்கள் வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை வெளியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கும்படி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிற போது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் நிலை உள்ளது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை கூறியிருந்தது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வின் முன்னிலையில் நேற்று கோரிக்கை வைத்தார். அதில், ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை மின்னணு அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும். இது குறித்து முந்தைய உத்தரவும் உள்ளது. ஆனால், எந்த அரசியல் கட்சியும் தங்கள் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெளியிடவில்லை. அதுபோன்று இருக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை உடனடியாக நீக்க வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில வாரத்தில் உபி, பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இதனை அவசர வழக்காக விசாரித்து உத்த்ரவும் பிறப்பிக்க வேண்டும்,’ என தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கு உடனடியாக பட்டியலிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனு ஓரிரு நாட்களில்  விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Related Stories: