வடலூரில் தைப்பூசப் பெருவிழா வள்ளலார் சத்தியஞான சபையில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம்

குறிஞ்சிப்பாடி: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் தைப்பூசப் பெருவிழாவையொட்டி நேற்று காலை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூசப் பெருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை 5.50 மணி அளவில் சபையில் மணி அடிக்கப்பட்டது. சரியாக 6 மணி அளவில் கதவு திறக்கப்பட்டு, ஏழு திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது. முதல்கால ஜோதியானது, 6 மணி முதல் 7 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை காண்பிக்கப்பட்டது.

வடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள், சபை வளாகத்தில் தங்கி உள்ளவர்கள் மட்டும் ஜோதி தரிசனத்தை கண்டு மகிழ்ந்தனர். அவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஜோதி தரிசனம் செய்தனர். மக்கள் நேரடியாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டதால், சபை நிர்வாகம் சார்பில் யூடியூப் சேனல் வழியாகவும், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவும் ஒளிபரப்பு செய்ய இந்து சமய அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஜோதி தரிசனம் காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணிக்கு காண்பிக்கப்பட்டது.

* வெறிச்சோடிய சபை வளாகம்

ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழாவில், 5 லட்சம் பேருக்கு மேல் தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக இந்தாண்டு பக்தர்கள் ஜோதி தரிசனத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பொதுமக்கள், பங்கேற்க தடை என அறிவிக்கப்பட்டதால், வள்ளலார் வளாகம் முழுவதும், பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: