சபரிமலை திருவாபரண பாதையில் வெடி பொருட்கள் கண்டெடுப்பு: சதி செயலா? என போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை காலை கோயில் நடை சாத்தப்படுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்ட திருவாபரணம் நடை சாத்தப்பட்ட பின்னர் மீண்டும் பந்தளம் கொண்டு செல்லப்படும். இந்த ஆபரணம் 21ம் தேதி பந்தளத்தை அடையும். சபரிமலையில் இருந்து திருவாபரணம் கொண்டு செல்ல பாரம்பரிய பாதை உள்ளது. திருவாபரணம் செல்லும் பாதையில் ,வடசேரிக்கரை அருகே பேங்காட்டில் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே ஒரு பிளாஸ்டிக் பையில் மர்ம பொருள் இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். அதை திறந்து பார்த்தபோது ஜெலட்டின் குச்சிகள் என்று தெரிய வந்தது. இது குறித்து வடசேரிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று அதை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  அது சக்தி வாய்ந்த வெடி பொருள் என்பது தெரிய வந்தது. திருவாபரணம் செல்லும் பாதையில் இது வைக்கப்பட்டது எதற்காக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு பத்தனம்திட்டை மாவட்ட எஸ்பி உட்பட அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். இது குறித்து திருவாபரண பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சசிகுமார் வர்மா கூறுகையில், திருவாபரண பாதையில் வெடி பொருள் கைப்பற்றப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதில் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து  விசாரணை நடத்தவேண்டும் என்றார். இது குறித்து தென் மண்டல ஐஜி பிரகாஷ் கூறியதாவது:  ‘இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: