முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதல்

பார்ல்: இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பார்ல் நகரில் இன்று  பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி பார்ல், போலண்ட் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது.

 2வது போட்டி ஜன.21ம் தேதியும் (பார்ல்), 3வது போட்டி ஜன.23ம் தேதியும் (கேப் டவுன்) நடைபெற உள்ளன.

டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ள கோஹ்லி, சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு சாதாரண வீரராக விளையாட உள்ளார். ரோகித் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால்,  துணை கேப்டன் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இளம் வீரர்கள் ஷ்ரேயாஸ், ருதுராஜ், வெங்கடேஷ், சூரியகுமார் ஆகியோரது அதிரடி ஆட்டத்தைக் காண, இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். களமிறங்கும் 11 வீரர்களில் இடம் பிடிக்க இவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்க அணிக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), பும்ரா, தவான், ருதுராஜ், கோஹ்லி, சூரியகுமார், ஷ்ரேயாஸ், வெங்கடேஷ், பன்ட் (கீப்பர்), இஷான் (கீப்பர்), சாஹல், அஷ்வின், புவனேஷ்வர், தீபக் சாஹர், பிரசித் கிரிஷ்ணா, ஷர்துல், சிராஜ், ஜெயந்த், நவ்தீப் சைனி.

தென் ஆப்ரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), கேஷவ் மகராஜ், டி காக் (கீப்பர்), ஜுபேர் ஹம்சா, மார்கோ ஜான்சென், சிசந்தாமெகளா, ஜானிமன் மலான், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, வேய்ன் பார்னெல், அந்தில் பெலுக்வயோ, டுவைன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்சி, வாண்டெர் டஸன், கைல் வெரெய்ன் (கீப்பர்).

* ஆல்ரவுண்டர் அஷ்வின் 2017க்கு பிறகு ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

* தலைமை பயிற்சியாளராக டிராவிட் பொறுப்பேற்ற பிறகு இந்தியா விளையாடும் முதல் ஒருநாள் ஆட்டம் இது. கடந்த ஜூலையில் ஒருநாள்,  டி20 ஆட்டங்களில் இலங்கை சென்று விளையாடிய தவான் தலைமையிலான இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் இந்தியா வென்றுள்ளது. ஒரு ஆட்டம் மழை குறுக்கிடவே டக்வொர்த் லீவிஸ் முறையில் தெ.ஆப்ரிக்கா வென்றது. எஞ்சிய ஒரு ஆட்டம் கொரோனா அச்சுறுத்தலால் கைவிடப்பட்டது.

* கடந்த 31 ஆண்டுகளில் இருஅணிகளும் 84 ஒருநாள் போட்டிகளில் களம் கண்டுள்ளன. அவற்றில் தென் ஆப்ரிக்கா 46 - 35 என முன்னிலை வகிக்கிறது. 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.

Related Stories: