தேசிய பாதுகாப்பு அகாடமியில் இந்தாண்டும் 19 பெண்களை மட்டுமே தேர்வு செய்வதா? ஒன்றிய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பயிற்சி மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கும் பணியை தேசிய பாதுகாப்பு அகாடமி நிறுவனம் செய்து வருகிறது. இந்த ராணுவ பயிற்சி பள்ளியில் பெண் அதிகாரிகள் உருவாகும் வகையில் பெண்களின் எண்ணிகையை அதிகரிக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், குஷ் கல்ரா என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சின்மோய் பிரதீப் சர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவில், `ராணுவ பயிற்சி பள்ளிக்கு தேர்வாகும் பெண்களின் எண்ணிக்கை கடந்தாண்டை போல, இந்தாண்டும் 19 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 19 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதாக ஒன்றிய அரசு தேர்வு அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்தாண்டு இந்த எண்ணிக்கையை உயர்த்தும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய போது, 2022ம் ஆண்டு மே மாதத்துக்குள் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஒன்றிய அரசு எண்ணிக்கையை மீண்டும் 19 ஆக நிர்ணயித்துள்ளது,’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்கே. கவுல், எம்எம். சுந்தரேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதியிடம், 2022ம் ஆண்டு தேர்விலும் பெண்களின் எண்ணிகையை அரசு ஏன் 19 ஆக நிர்ணயித்தது என்பது குறித்து 3 வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: