பாங்காங் ஏரியின் குறுக்கே 400 மீட்டர் நீளம் பாலம் கட்டும் பணி கொட்டும் பனியிலும் சீனா அசுர வேகம்: ராட்சத கிரேனுடன் இரவுப் பகலாக தீவிரம்; செயற்கைக்கோள் புகைபடங்களில் அம்பலம்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பாங்காங் ஏரியின் குறுக்கே கட்டி வரும் பாலத்தின் நீளத்தை சீனா 400 மீட்டராக அதிகரித்துள்ளது. கடுமையாக பனி கொட்டி கொண்டுள்ள போதிலும், இந்த பாலத்தை கட்டும் பணியில் சீன ராணுவம் அசுர வேகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பிரமாண்ட கிரேன்  உள்ளிட்ட ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா - சீனா இடையே கடந்த 2020ம் ஆண்டு முதல் கிழக்கு லடாக் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. இந்த பகுதியில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உட்பட பல்வேறு பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றதை, கடுமையான பதிலடியின் மூலம் இந்திய ராணுவம் தடுத்தது. கல்வானில் இருதரப்புக்கும் நடந்த இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அதே நேரம், இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் பலியாகினர். ஆனால், அந்த நாடு அதை மூடி மறைத்து விட்டது. தற்போது, இந்த எல்லை பிரச்னையை தீர்க்கவும், எல்லையில்  இருதரப்பும் குவித்துள்ள படைகளையும் வாபஸ் பெறுவது தொடர்பாகவம் இதுவரையில் 14 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில், பாங்காங் ஏரி உட்பட ஒரு சில இடங்களில் இருந்து மட்டுமே, கடந்தாண்டு பிப்ரவரியில் படைகள் வாபஸ் பெறப்பட்டது. மற்ற இடங்களில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவம் நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில், பாங்காங் ஏரியின் குறுக்கே சீன ராணுவம் பாலம் கட்டி வருவது சமீபத்தில் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்த சர்ச்சைக்குரிய இடத்தில்தான் இந்த பாலம் கட்டப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு சில தினங்களுக்கு முன் விளக்கம் அளித்தது. அதே நேரம், சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தது. இந்நிலையில், கிழக்கு லடாக் முழுவதும் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பாங்காங் ஏரியும் கூட உறைந்து காணப்படுகிறது. இந்திய வீரர்களை போல், சீன வீரர்களால் கடுங்குளிரை தாங்க முடியாது. இதனால், பலர் இறந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், சீன அரசு இதை மறுத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையிலும். பாங்காங் ஏரியின் வடக்கு- தெற்கு கரைகளை இணைக்கும் வகையில், 8 மீட்டர் அகலமும், 400 மீட்டர் நீளமும் கொண்ட பிரமாண்ட பாலத்தை கட்டும் பணியில் சீன ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 16ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைபடத்தின் மூலம் இது உறுதியாகி இருக்கிறது. இரும்பு பாலத்தின் மீது கான்கிரீட் பலகைகளை தூக்கி வைப்பதற்காக ராட்சத கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அசுர வேகத்தை வைத்து கணக்கிடுகையில், அடுத்த சில மாதங்களில் இந்த பாலம் கட்டும் பணியை சீனா முடித்து விடும் என தெரிகிறது.

பாங்காங் ஏரியின் வடக்கு பகுதியில் சீனாவின் முக்கியத்துவம் மிக்க ராணுவ தளமான ரூடாங் அமைந்துள்ளது. தற்போது இந்த இடத்துக்கு செல்வதற்கு, பாங்காங் ஏரியை சுற்றிக் கொண்டு சீன ராணுவம் 200 கிமீ பயணிக்க வேண்டியுள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால், இந்த தூரம் 150 கி.மீ ஆக குறைந்து விடும். இதனால், சீனா தனது ராணுவத்தை இந்த பாலத்தின் மூலமாக இந்திய எல்லைக்கு மிகவும் நெருக்கமாக, விரைவில் கொண்டு வந்து  சேர்க்க முடியும். இந்த பாலம், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தெரிகிறது.

* 4,350 கிமீ உயரத்தில் உள்ள ஏரி

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தின் கிழக்கில், இந்திய-திபெத் எல்லைக்கு அருகே, பாங்காங் ஏரி மிகவும் பிரமாண்டமான அளவில் பரந்து விரிந்துள்ளது. இது 134 கிமீ நீளமும், 5 கிமீ அகலமும் கொண்டது. இதன் உண்மை பெயர், ‘பாங்காங் டிசோ’. திபெத்திய மொழியில், ‘டிசோ’ என்பதற்கு ‘ஏரி’ என்று பொருள். இது கடல் மட்டத்தில் இருந்து 4,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

* பாலம் கட்ட தொடங்கியது ஏன்?

பாங்காங் ஏரி பகுதிகளை 2020ல் சீன ராணுவம் ஆக்கிரமிக்க முயன்ற போது, அதை சுற்றியுள்ள உயரமான கைலாஷ் சிகரம்  உள்ளிட்ட முக்கிய மலை சிகரங்களை இந்திய ராணுவம் அதிரடியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதை பார்த்து, அந்த பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்த சீன வீரர்கள் பின்வாங்கினர்.  அதன் பிறகே, பாங்காங் ஏரியை இணைப்பதற்கான பாலத்தை அது கட்ட தொடங்கியது.

Related Stories: