ஆவடி மாநகராட்சியில் தெருக்களில் விரட்டி விரட்டி கடிக்கும் நாய்கள்: அலறி ஓடும் பொதுமக்கள்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், கோவில்பாதாகை, பட்டாபிராம், மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, பாதுகாப்பு துறை நிறுவனங்களும், ரயில்வே பணிமனை, இந்திய உணவு கழகம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய விமான படை பயிற்சி மையங்களும் உள்ளன. மேற்கண்ட பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருவி 10க்கு மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி மாநகர பகுதியில்  சாலையில் நடந்து செல்லும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரை நாய்கள் விரட்டுகின்றன.

மேலும், இவைகள் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் செல்லும் அரசு, தனியார் ஊழியர்கள், டியூசன் முடிந்து வரும் மாணவர்களையும் விட்டு வைப்பதில்லை. அவர்களை நாய்கள் விரட்டும்போது வாகனங்களில் இருந்து விழுந்து படுகாயம் அடைக்கின்றனர். மேற்கண்ட பகுதியில் உள்ள பாஸ்ட் புட், இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை நாய்கள் சாப்பிட்டு வெறி கொண்டு அலைகின்றன. இவைகள் தெருவில் செல்வோரை விரட்டி கடிக்கின்றன. இதனால், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் ஒன்றாக சேர்ந்து ஊழை இடுகின்றன. இதனால், குடியிருப்புவாசிகள் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுகின்றனர். இதுபற்றி, சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர். ஆனாலும், அதிகாரிகள்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆவடி மாநகராட்சியில் பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலும், இனபெருக்கத்தை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. இதனால், தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போது, மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட நாய்கள் உள்ளன. இவைகள் கடித்தால், ஆவடி அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் ஊசி, மருத்துகள் இல்லை. நாய் கடி சிகிச்சைக்காக பொதுமக்கள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்லும் அவலநிலை உள்ளது. குறிப்பாக, கடந்த அதிமுக ஆட்சியில் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தல், இனபெருக்கத்தை தடுக்க கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் ஆகிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நாய்களை அப்பபுறப்படுத்தவும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: