தைப்பூசத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் பொதுமக்கள் கோபுர தரிசனம்: ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பக்தர்கள்

ஊத்துக்கோட்டை: கொரோனா, ஓமிக்ரான் தொற்று பரவல் எதிரொலியால் தமிழகம் முழுவதும் கோயில் மூடப்பட்டுள்ளன. இந்தவேளையில், சிறுவாபுரி முருகன் கோயிலில் தைப்பூச விழாவுக்கு வந்த பக்தர்கள், கோயிலுக்கு வெளியே நின்று கோபுர தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சி சிறுவாபுரி கிராமத்தில் பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து திருமணம், வீடு கட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை முதல் 18ம் தேதி தைப்பூசம் வரை 5 நாட்கள் கோயில் மூடப்படும் என அரசு அறிவித்தது. இந்தவேளையில், நேற்று தைப்பூசம் என்பதால் சிறுவாபுரியை சுற்றியுள்ள பக்தர்கள் கோயில்களுக்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் பெரியபாளையம், ஆரணி, திருவள்ளூர், சென்னை, செங்குன்றம் என பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர். ஆனால், கோயில் மூடப்பட்டு இருந்ததால், பக்தர்கள் கோயில் வெளியேயும், கோயில் பின்புறம் உள்ள அரச மரம் மற்றும் வேப்ப மரத்தை சுற்றி வந்து தரிசனம் செய்து சூடம் ஏற்றி வழிபட்டனர். சில பக்தர்கள் கோயிலின் வெளிவட்ட பகுதியில் சுற்றித்திரிந்த முருகனின் வாகனம் என்றழைக்கப்படும் மயிலை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே ஸ்ரீதேவி குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கடம்பவன முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால், நேற்று தைப்பூச திருவிழா, பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. இதில், உற்சவர் வள்ளி, தேவயானை சமேத ஸ்ரீ கடம்பவன முருக பெருமானுக்கு விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.   

Related Stories: