திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்: விவசாயம் அழியும் அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், விளைநிலங்கள் வீட்டு மனைகளுக்காக விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், புதுமாவிலங்கை எம்ஜிஆர் நகரில் கண்ணுக்கு பசுமையாக காட்சியளிக்கும் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனைக்கு வைத்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களால், விவசாயம் படிப்படியாக அழிந்து போக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சைபசேல் என இருந்த நெல்வயல்கள், இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காட்சியளிக்கிறது. ஆதிகாலத்தில் இருந்த மனிதன் பசிக்காக விவசாயத்தைக் கண்டுபிடித்தான். இக்காலத்தில் உள்ள மனிதனோ அதனை பணத்துக்காக அழித்து வருகிறான். கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள் கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட்  உரிமையாளர்களிடம் தங்களது நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக விளைநிலங்கள் வீட்டு மனைகளுக்காக விற்பது அதிகரித்துள்ளது. போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் நிலங்களை, தரிசு நிலங்களாக்கினர். பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அறிவிக்கபட்ட பின் விவசாயிகள் விவசாயம் செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். ஆனால் நகரங்களில், வீட்டு மனைகளுக்கான இடத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரியல் எஸ்டேட் நடத்துவோர், தேசிய நெடுஞ்சாலை ஓர கிராமங்களை தேர்ந்தெடுத்து மொத்தமாக விளை நிலங்களை விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர். விளைநிலங்களுக்கு அதிக விலை கிடைப்பதால், விவசாயிகள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், வரும் காலங்களில் விவசாய சாகுபடி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ‘உலக மயம்’ என்ற வார்த்தை இன்றைய உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாடாய்படுகிறது. ‘உலக மயம்’ ‘தாராள மயம்’ என்ற வார்த்தைகளை அடுக்கினாலும், உண்மையில் அனைத்தும் தனிநபர்களை முதலாளியாக்குகின்றன. உலகில் உள்ள பெரும் பணக்காரர்களின் கையில் உலகத்தையே ஒப்படைப்பது தான், இந்த வார்த்தைகளின் அர்த்தம்.

வெளிநாட்டு கொள்கையில் அனைத்து தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டாலும், விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புதிது, புதிதாக தொடங்கப்பட்ட மனை விற்பனை நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு விவசாயத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கூறுபோட்டு கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் இன்றியமையாதது அந்நாட்டின் உணவு உற்பத்தியே. அத்தகைய உணவு உற்பத்தியை இயற்கையாக பெற்றுள்ள நமது நாட்டில், விவசாயத்தை பேணிக்காப்பது நமது கடமை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: