தைப்பூசத் திருநாளையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட திருப்போரூர் கந்தசுவாமி கோயில்: கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்; வெளியே தேங்காய் உடைத்து வழிபாடு

திருப்போரூர்: தமிழகத்தில்  தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 14 முதல் 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பொங்கல் கொண்டாட்டங்களையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை. இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு, பொதுமக்கள் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு வழக்கமாக நடத்துவர். ஆனால், நேற்று கோயில்கள் மூடப்பட்டு இருந்ததால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வந்தனர். ஆனால், கோயில் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், பக்தர்கள் கோயிலுக்கு வெளியே 16 கால் மண்டபம் மற்றும் தெற்கு வாசல் மண்டபத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களில் இருந்து பால் பெறப்பட்டு, உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பன்னீர் காவடி, பால் காவடி சுமந்து மாடவீதிகளை வலம் வந்து கோயிலுக்கு வெளியே நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மேலும், மொட்டை அடிக்கும் மண்டபம் மூடப்பட்டதால், மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்ற வந்த பக்தர்கள், சலூனுக்கு வெளியே அமர்ந்து, தங்களின் முடி காணிக்கையை செலுத்தினர். வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் முருகன் கோயில்களில், கொரோனா ஊரடங்கு காரணமாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் மட்டுமே வந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்தபுராணம் அரங்கேற்றிய காஞ்சிபுரம் குமரக்கோட்டம், வல்லக்கோட்டை, குன்றத்தூர், இளையனார் வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முருகன் கோயில்கள் மட்டும் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. இதையொட்டி, பக்தர்கள் நேற்று காலையிலேயே காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் வாசலுக்கு வந்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கோபுரத்தை தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டதால், தரிசனம் செய்ய முடியாமல் வெளி மாநிலம், மாவட்ட பக்தர்கள் வேதனையுடன் கோபுரத்தை தரிசித்தனர்.

Related Stories: