×

காவடி தூக்கி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வாசலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி, கந்தகோட்டம், வடபழனி முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கோயில் வாசலில் நின்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிலர் காவடி தூக்கியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நேற்று விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, சென்னையில் வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்,  சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், பாரிமுனை கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில், திருப்போரூர் முருகன் கோயில்,  வல்லக்கோட்டை முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோயில்களுக்கு பக்தர்கள் ெசல்ல தடை விதிக்கப்பட்டது. தைப்பூசம் என்பதால் நேற்று முருகன் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்த அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோயில்களின் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே தேங்காய் உடைத்தும், கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றியும் முருகப்பெருமானை வழிபட்டனர். இந்நிலையில், கோயில்களுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தாலும் நுழைவாயிலில் நின்று பக்தர்கள் சிலர் பால்குடம், காவடி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப் பூச தெப்ப திருவிழா நேற்று முன்தினம் முதல் இன்று வரை 3 நாட்கள் நடக்கிறது. 3வது நாளான இன்று 9 சுற்றுகளும் தெப்பம் வலம் வர உள்ளார். இந்த தெப்பத்திருவிழா http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE என்ற யூடியூப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Tags : Murugan ,Thaipusam festival ,Swami , Kawadi lifted, stabbed the unit and paid the fine Special worship at Murugan temples on the eve of Thaipusam festival: Devotees standing in the doorway Swami Darshan
× RELATED கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்