சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் பெண்களுக்கு 100 ஒதுக்கீடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல்?: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில், கடந்த 2019 டிசம்பர் மாதம் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. இந்நிலையில், ஜனவரி 31ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. முதல்கட்டமாக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அடுத்தகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடக்கிறது. இதில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்கின்றனர். அவர்களின் கருத்துகளை கேட்டு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நிலைப்பாட்டை அறிவிக்கும். அதே நேரத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்தும் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

கட்சிகளின் கருத்துகளை கேட்டு வரும் 24ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், அன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. உச்ச நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரம் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இப்போதைக்கு தேர்தல் நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படும் என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. இல்லாவிட்டால் வருகிற பிப்ரவரியில் தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது.

எந்த மாநகராட்சியில் மேயர் பதவிக்கு பெண்கள் போட்டியிடலாம்

மாநகராட்சி தேர்தலில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மேயர் பதவிக்கு போட்டியிடும் மாநகராட்சிகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிகள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்டவர் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுப் பிரிவு பெண்கள் (9) என மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சி தலைவர்கள் பதவி யாருக்கு?

தமிழகத்தில் பேரூராட்சிகளில் பழங்குடியினருக்கு 3, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 43 பேரூராட்சிகளும், ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கு 42 பேரூராட்சிகளும், பொதுப் பிரிவில் உள்ள பெண்களுக்கு 200 பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவினர் போட்டியிடும் மாநகராட்சிகள்

திருச்சி, சேலம், திருப்பூர், நெல்லை, ஓசூர், தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய 9 மாநகராட்சிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து ஆண்கள், பெண்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் மேயர் பதவிக்கு போட்டியிடலாம்.

மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டு விவரம்

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகள் யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் 100 வார்டுகள் பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 வார்டுகள் பட்டியலின பொதுப்பிரிவுக்கும், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகள், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி 3, 16, 17, 18, 21, 22, 24, 45, 62, 72, 73, 99, 108, 117, 114, 200 ஆகிய வார்டுகள் பட்டியலின பொதுப்பிரிவுக்காக (ஆண் அல்லது பெண்) ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலின பெண்களுக்காக 2, 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு பெண்களுக்கு 2, 8, 9, 11, 13, 14, 15, 26, 33, 34, 39, 40, 41, 42, 43, 44, 48, 51, 58, 61, 65, 66, 67, 68, 69, 71, 75, 76, 79, 79, 81, 83, 87, 88, 91, 93, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 107, 109, 112, 113, 115, 118, 119, 122, 123, 124, 125, 126, 128, 131, 132, 134, 136, 147, 149, 150, 152, 153, 157, 158, 160, 161, 163, 164, 167, 171, 173, 174, 175, 179, 180, 183, 185, 187, 188, 191, 197 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 84 வார்டுகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஆண் அல்லது பெண்கள் எந்தப் பிரிவினரும் போட்டியிடலாம். இந்த அரசாணையின்படி பட்டியலின பெண்கள் வார்டு 16, பொதுப் பிரிவு பெண்கள் 84 என மொத்தம் 100 வார்டுகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு ெவளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி தலைவர்கள் விவரம்

தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளில் 20 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: