கொரோனாவுக்கு பயந்து மருத்துவமனை மேலாளர் விஷ ஊசி போட்டு தற்கொலை: உரிய சிகிச்சை எடுத்தால் குணமாகலாம் என்ற நிலையில் விபரீத முடிவு

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மேலாளர் ஒருவர், உடலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப்மோகன் (29). இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் சந்தீப்மோகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் பணியாற்றும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள தனி அறையில் சிகிச்சையில் இருந்த சந்தீப் மோகன் சுயநினைவு இன்றி கிடந்தார். இதை பார்த்த டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து கிடந்தார். சந்தீப்மோகன் கையில் ஊசி செலுத்தப்பட்டிருந்தது. உடனே டாக்டர்கள் அந்த ஊசியை எடுத்து பார்த்த போது அது விஷ ஊசி என்பது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை சார்பில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் சந்தீப்மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என விசாரிக்கின்றனர். தனியார் மருத்துவமனை மேலாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பயந்து விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உரிய சிகிச்சை எடுத்தால் கொரோனாவில் இருந்து குணமாகலாம் என்பது மருத்துவமனை மேலாளருக்கு நன்றாக தெரிந்து இருந்த நிலையில், அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories: