வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு  முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை  சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 60 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வீடு தேடி சென்று செலுத்தும்  திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர்  ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழகத்தில்  பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 92,522 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர்  தடுப்பூசி செலுத்த 4.42 லட்சம் பேர் தகுதி உடையவர்கள். ஜனவரி இறுதிக்குள்  தமிழகத்தில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி பெறுவார்கள்.  ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் இனி பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம்  நடத்தப்படும். வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னை மாநகராட்சி  தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று  பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவல் அதிகமாக இருக்கிறது.  பொங்கலுக்கு நிறைய பேர் கிராமத்துக்கு சென்றார்கள். வரக்கூடிய நாட்களில்  பாதிப்பு அதிகரிக்குமா என்பது 2 நாட்களில் தெரியவரும். இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: