பொதுப்பணித்துறை அதிரடி நடவடிக்கை தமிழகத்தில் புதிதாக நீர்வள ஆதாரத்துறை உருவாக்கம்: அரசு உத்தரவு

சென்னை: பொதுப்பணித்துறையில் கட்டுமானம், நீர்வளம் ஆகிய 2 பிரிவுகள் இருந்தன. இதில், கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு துறைகளின் அரசு கட்டிடங்களை புனரமைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளும்,  நீர்வளப்பிரிவு மூலம் அணை, ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை, கதவணை அமைத்தல்  உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, அதன் அமைச்சராக துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பொறுப்பேற்றுக் கொண்டனர். இதைதொடர்ந்து, பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை நிர்வாக பிரிவு தனித்தனியாக பிரிக்கப்பட்டன.  இதன் மூலம் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் பணி நியமனம், காலி பணியிட அறிக்கை தயார் செய்வது, சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்வது, பதவி உயர்வு, பணியிட மாற்றம், ஊதிய நிர்ணயம், ஒழுங்குமுறை நடவடிக்கை, ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய அறிக்கை தயார் செய்வது போன்ற பணிகளை தனித்தனியாக நிர்வாக பிரிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதையடுத்து பொதுப்பணி, நீர்வளத்துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள ெபாறியாளர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பொதுப்பணித்துறையில் புதிதாக மண்டலம், கோட்டம், உபகோட்டமும், நீர்வளத்துறைக்கு புதிதாக கோட்டம், உபகோட்டம் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், நீர்வளப்பிரிவை பொதுப்பணித்துறையில் இருந்து பிரித்து நீர்வளஆதாரத்துறை என்கிற பெயரில் புதிய துறையை உருவாக்கம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் வணிக விதிகள் 1978ன்படி திருத்தம் மேற்கொண்டு நீர்வளப்பிரிவை பொதுப்பணித்துறையில் இருந்து பிரித்து நீர்வளஆதாரத்துறை என்ற புதிய துறையை உருவாக்கம் செய்து ஆணையிடப்படுகிறது. இதற்காக திருத்தம் கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து புதிய துறையான நீர்வள ஆதாரத்துறையாக செயல்படுகிறது. மனிதவள மேலாண்மை துறையின் உத்தரவுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: