11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு தமிழக அரசுக்கு விசிக பாராட்டு

சென்னை: சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் தொகுதிகளாகவும், சென்னை உட்பட  11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் தொகுதிகளாகவும் சென்னை உட்பட  11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூகநீதி மீது பற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு தற்போது பஞ்சாயத் ராஜ் சட்டப்படி சென்னை ஆவடி தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளைத் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆதிதிராவிடப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சென்னையின் மேயராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது மேலும் சிறப்பு வாய்ந்த நடவடிக்கையாகும். சமூக நீதியை செயல்படுத்துவதில் முதலமைச்சர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை விசிக சார்பில்  மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம்.

 உள்ளாட்சி அமைப்புகளில் துணைத்தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எமது நீண்ட நாள் கோரிக்கை. அது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியே வழக்கு தொடுத்திருந்தோம். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பதவிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசும் ஒரிசா மாநில அரசு போல சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்ததுபோல,  துணைத்தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து சமூக நீதியை முழுமையாக நிலைநாட்டவேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: