உளவுத்துறை எச்சரிக்கை குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி : நாடு முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

புதுடெல்லி: குடியரசு தினவிழாவை சீர்குலைப்பதற்கு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை முதல் டிரோன், பாராகிளைடர்கள், ஏர் பலூன்கள் பறப்பதற்கு போலீசார்  தடை விதித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குடியரசு தின விழாவை கொண்டாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ராணுவ அணிவகுப்பு எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லி உட்பட  நாடு முழுவதும் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள், ஏர் பலூன்கள், பாராகிளைடர்கள் போன்றவை பறப்பதற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக டெல்லி போலீஸ் ஆணையர் ராகேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குடியரசு தின விழாவில் கிரிமினல் அல்லது சமூக விரோத சக்திகள் மற்றும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன. இதன் காரணமாக, மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி முழுவதிலும் முக அடையாளத்தை பதிவு செய்யும் சாப்ட்வேர் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். உள்ளூர் போலீசார், சிறப்புபிரிவு, போக்குவரத்து போலீஸ், ஸ்வாட் பிரிவு உட்பட டெல்லி போலீசின் அனைத்து பிரிவுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். துணை ராணுவம் மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு படையும் பாதுகாப்பு பணியில் இடம் பெறுவார்கள். இரண்டு இடங்களில் டிரோன் எதிர்ப்பு தாக்குதல் அமைப்பு அமைக்கப்படும்.

உயர்ந்த கட்டிடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சந்தேகத்துக்குரிய வகையில் வானில் பறக்கும் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்படும். விழா நடைபெறும் இடத்துக்கு  மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20ம் தேதி முதல் (நாளை) வானில் பறக்கும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆளில்லா டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன், பாராகிளைடர்ஸ், ஏர் பலூன் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படலாம். விழாவில் விருந்தினர்கள் கலந்து கொள்ளும் விவகாரத்தை வெளியுறவு துறை அமைச்சகம் தனியாக கையாள்கிறது,’ என்றனர்.

ஆயிரம் டிரோன்கள் பறக்கும்

வழக்கமாக, டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகு 3 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 29ம் தேதி முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும். இதில், ஜனாதிபதி கலந்து கொள்வார். இந்த முறை நாட்டின் 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த நிகழ்ச்சியில் பல்வேறு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 75வது சுதந்திர தினத்தை பிரதிபலிக்கக் கூடிய லேசர் ஒளிவிளக்கு மூலம் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ஆயிரம் டிரோன்கள் ஒரே நேரத்தில் பறக்கும் நிகழ்ச்சிக்கும், புதிய தொழில் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: