பக்தர்களின்றி நடந்தது; திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று தைப்பூச திருவிழா: தடையை மீறி கடலில் புனித நீராடிய பக்தர்கள்

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (18ம்தேதி) தைப்பூச திருவிழா பக்தர்களின்றி நடைபெற்றது. பைரவர் கோயில் கடற்கரையில் தடையை மீறி பக்தர்கள் புனித நீராடினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். தமிழகத்தில் கொரோ னா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 14ம்தேதி முதல் தைப்பூசமான இன்று (18ம்தேதி) வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களின் தரிசனத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 நாட்கள் தடை காரணமாக அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13ம்தேதி வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இன்று (18ம்தேதி) தைப்பூச திருவிழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 7 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கோயிலில் இருந்து அஸ்திரதேவரை எடுத்து வந்து கடலில் நீராடி தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், 11 மணிக்கு உச்சிக்கால தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாயரட்சையும், 5 மணிக்கு மேல் அலைவாயுகந்த பெருமான் புறப்பாடு கோயிலின் உள் பிரகாரத்திலும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்தம் நடக்கிறது. 8 மணிக்கு நடை திருக்காப்பிடப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை  பக்தர்கள் கோயிலுக்கு வெளியே டோல்கேட் அருகில் நின்று கோபுர தரிசனம் செய்து சென்றனர். ஒருசில பக்தர்கள் தங்களது சமுதாய மண்டபங்களில் இன்று தங்கி உள்ளனர். அவர்கள் நாளை (19ம்தேதி) நடை திறந்ததும் சாமி தரிசனம் செய்து செல்வார்கள். பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று கோயில் வளாகம் மற்றும் கடற்கரை, நாழிகிணறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதையொட்டி போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்களை அப்புறப்படுத்திய போலீசார்

கோயிலில் சாமி தரிசனம் செய்யவும், கடலில் புனித நீராடவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோயில் கடற்கரை மற்றும் நாழிகிணறு பகுதிகளை போலீசார்  கண்காணித்தனர். இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் அருகே உள்ள பைரவர் கோயில் கடற்கரையில் தடையை மீறி புனித நீராடினர். தகவல் அறிந்து போலீசார் சென்று அங்கு புனிதநீராடிய பக்தர்களை அப்புறப்படுத்தினர்.

Related Stories: