திண்டுக்கல்லில் பனங்கிழங்கு விற்பனை அமோகம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட் பகுதியில் பனங்கிழங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மருத்துவ குணமுள்ள இயற்கை உணவுப்பொருள் என்பதால் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாங்கி செல்கின்றனர். பனைமரத்தின் விதைகளை மண்ணில் பதித்து வைத்து 3 மாதத்திற்கு பிறகு மண்ணுக்குள் வேராக வளர்ந்திருக்கும் கிழங்கை தோண்டியெடுத்து வேக வைத்து இயற்கை உணவுப் பொருளாக பயன்படுத்தப்படும். இந்த கிழங்கில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

 திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக கோவில்பட்டி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து பனங்கிழங்கு விற்பனைக்கு குவிந்து வருகிறது. திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட் மற்றும் திருச்சி ரோடு காட்டஸ்பத்திரி அருகே  சாலையோரங்களில் கடைவிரித்து ஏராளமானோர் விற்பனை செய்து வருகின்றனர்.  சில தினங்களுக்கு முன் ரூ.2 முதல் 3க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பனங்கிழங்கு தற்போது ரூ.3 முதல் 5 வரை விற்பனையாகிறது. 10 பனங்கிழங்குகள் கொண்ட கட்டு ரூ.40 முதல் 50க்கு விற்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மார்கழி, தை ஆகிய இரு மாதங்களில் மட்டுமே கிடைக்கும் பனங்கிழங்கு, மருத்துவ குணமுள்ள இயற்கை உணவுப்பொருள் என்பதால், விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: