மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருளில் மூழ்கி கிடக்கும் 2வது நடைமேடை: பெண்கள் அச்சம்

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 2வது நடைமேடையில் ரயில் வரும் நேரம் மட்டுமே விளக்கு எரிகிறது. மற்ற நேரங்களில் இருளில் மூழ்கி கிடப்பதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். மானாமதுரை-ராமேஸ்வரம் இடையே அகலப்பாதை கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி திறக்கப்பட்டது. திருச்சி, மதுரை, விருதுநகர் மார்க்கமாக மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் 16 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் சென்னைக்கு இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன.

இதுதவிர வாராந்திர ரயில்களான வாரணாசி, புவனேஸ்வர், ஓகா, திருப்பதி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், புதுச்சேரி ரயில்கள் இயக்கப்படுவதால் இந்த ரயில்களில் செல்வதற்கு மானாமதுரை ரயில்நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்கின்றனர். இங்குள்ள 2, 3வது பிளாட்பாரங்களில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் ரயில் வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே பயணிகள் வந்து விடுகின்றனர். ஆனால் 2, 3வது பிளாட்பாரங்களில் மின்விளக்குகளை எரிய வைப்பதில்லை. இதனால் ரயில் வரும் வரை பயணிகள் இருளிலேயே இருக்கின்றனர்.

ரயில் வரும் நேரத்தில் மட்டும் விளக்குகளை எரிய வைக்கின்றனர். மேற்கு பகுதியில் திறந்தவெளியாக இருப்பதால் பெண்கள் கழுத்தில் நடைகளுடன் இருக்கும்போது வழிப்பறி, கொள்ளையர்கள் நகைகளை பறித்து செல்லக்கூடிய அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து பயணி சேகர் கூறுகையில், ‘இரவு நேரங்களில் 2, 3 வது பிளாட்பாரங்களில் விளக்குகளை எரியவிடுவதில்லை. ரயில் வரும் நேரம் மட்டுமே விளக்குகள் எரிகின்றன. தொலைதூர பயணங்கள் செல்லும் பயணிகள் ரயில் வருவதற்கு அரைமணி, ஒரு மணிநேரத்திற்கு முன்பே வந்து விடுகின்றனர்.

இந்த பிளாட்பாரங்களில் பெண்கள் தனியாக அமர்ந்திருக்கும் போது விளக்குகள் இல்லாததால் கழுத்தில் இருக்கும் நகைக்காக வழிப்பறி, கொலை நடக்க வாய்ப்புள்ளது. எனவே இரவு நேரங்களில் 2, 3 வது பிளாட்பாரங்களில் விளக்குகளை எரியவைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மானாமதுரை பயணிகளுக்கு வசதியாக இருக்கும்’ என்றார்.

Related Stories: