நடிகை பலாத்கார வழக்கில் பரபரப்பு; நடிகர் திலீப்பின் தங்கை கணவர் நண்பர் வீடுகளில் போலீஸ் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கின

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகை பலாத்கார வழக்கு தற்ேபாது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல சதிதிட்டம் தீட்டியது. பலாத்கார காட்சிகள் திலீப்பிடம் இருப்பதாக வெளியான தகவல் ஆகியவை தொடர்பான விசாரணையை குற்றப்பிரிவு போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை எர்ணாகுளம் அருகே ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப்பின் நண்பரும், ஓட்டல் பங்குதாரருமான சரத், கொச்சியில் உள்ள திலீப்பின் தங்கை கணவர் சூரஜ் ஆகியோரது வீட்டிலும் குற்றப்பிரிவு போலீஸ் எஸ்பி மோகன சந்திரன் தலைமையிலான போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

2 பேரின் வீடுகளிலும் நள்ளிரவு வரை சோதனை நடத்தப்பட்டது. நடிகையின் பலாத்கார காட்சிகள் இந்த வீடுகளில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது தவிர திலீப் ஒரு கை துப்பாக்கி வைத்திருந்தார் என்று பாலசந்திரகுமார் ஏற்கனவே போலீசிடம் கூறியிருந்தார். இந்த துப்பாக்கியை கண்டுபிடிக்கவும் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே திலீப்பின் வீட்டிற்கு ஒரு விஜபி வந்து சென்றதாக பாலசந்திரகுமார் கூறியிருந்தார். அந்த விஐபி சரத் ஆகத்தான் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

மேலும் பாலசந்திர குமார் திலீப் வீட்டிற்கு சென்றபோது தனக்கு தெரியாத 2 பேர் திலீப்புடன் இருந்ததாக கூறி இருந்தார். அவர்களில் ஒருவர் சரத் ஆக இருக்கலாம் என்றும், இன்ெனாருவர் கோட்டயத்தை சேர்ந்த தொழிலதிபரான மெகபூப் அப்துல்லாவாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவர்கள் 2 பேரும் பேசுவதை பாலசந்திரகுமார் ரகசியமாக தன்னுடைய டேப்பில் பதிவு செய்திருந்தார். அதில் பதிவான சத்தத்தை வைத்து அது சரத் மற்றும் மெகபூப்பின் குரல் தானா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

முக்கிய நபர் கைதாகிறார்

நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளின் நகல் மட்டுமே விசாரணையின் போது போலீசுக்கு கிடைத்தது. ஒரிஜினல் இதுவரை போலீசிடம் சிக்கவில்லை. அதை தன்னுடைய வக்கீல்களிடம் கொடுத்து உள்ளதாக வழக்கின் முக்கிய நபரான சுனில் குமார் போலீசிடம் கூறியிருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 வக்கீல்கள் மீதும் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை. பலாத்கார காட்சிகள் பதிவு செய்யப்பட்ட செல்போனை கொச்சியில் உள்ள ஆற்றில் வீசி விட்டதாக வக்கீல்கள் கூறினர்.

இதுவரை அந்த ஒரிஜினல் போலீஸ் கைக்கு சிக்கவில்லை. இந்த நிலையில் அந்த செல்போன் திலீப் நண்பர் சரத் அல்லது தங்கை கணவர் சூரஜ் வீட்டில் இருக்கலாம் என்று கருதியே போலீசார் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக விரைவில் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: