இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி: ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; 9 பேர் கைது

நாகை: நாகையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநில கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்று இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தவிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தினர். நேற்றிரவு இரு கார்களில் வந்த நபர்களை தனிப்படை போலீசார் வேதாரண்யம் அடுத்த புதுப்பள்ளி அருகே மடக்கிப்பிடித்தனர். காரை சோதனையிட்ட போது காரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த ஆந்திரா, கேரளா மற்றும் நாகை மாவட்டம் வேட்டைக்காரணி குரூப்பை சேர்ந்தவர்கள் என 3 மாநில கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சாவை கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட 9 பேரையும் நாகை, வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் கார் மூலம் வேதாரண்யத்திற்கு கடத்தி வரப்பட்டதாகவும் பின்னர் படகு மூலம் இலங்கைக்கு அதனை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: