3 நாட்களாக போலீஸ் சித்ரவதை: இறந்த மாற்றுத்திறனாளியின் மனைவி திடுக்கிடும் தகவல்

சேலம்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த நவம்பர் 16ம் தேதி, இவரது வீட்டில் 20 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கோட்டப்பட்டியை சேர்ந்த குமார்(35) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் (45), அவரது மனைவி ஹம்சலா(40) ஆகியோரையும், கடந்த 5ம் தேதி சேந்தமங்கலம் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

கடந்த 11ம்தேதி நாமக்கல் கிளைச் சிறையில் இருந்த பிரபாகரன் உடல் நிலை மோசமானதால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார். இந்நிலையில் தனது கணவரின் இறப்பு குறித்து, பிரபாகரனின் மனைவி ஹம்சலா கூறியதாவது: சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு என்னையும், எனது கணவரையும் அழைத்து சென்ற போலீசார், 5 நிமிடத்திற்கு பிறகு  சேந்தமங்கலம் போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து சென்றார்கள். அங்கு, எத்தனை பவுன் வைத்திருக்கிறாய்? எங்கு பதுக்கி வைத்திருக்கிறாய்?

நகையை திருடி வைத்ததாக ஒத்துகொள்ளுங்கள் என்று கூறி, எனது கணவரை அடித்தார்கள். என்னையும் பைப்பால் தாக்கினார்கள். அப்போது எனது கணவர், எனது மனைவியை நான் அடித்ததே கிடையாது.  அவரை விட்டு விடுங்கள் என்று போலீசாரிடம் கதறினார். அப்படியே 3 நாட்களும் எங்களை சித்ரவதை செய்தார்கள். ஒவ்வொரு நாளும் விடிந்தவுடன், போலீசார் வந்து விடுவார்களோ என்ற பயத்துடன் இருந்தோம். பின்னர், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு எனது கணவரை கொண்டு சென்ற போது, நான் மீண்டும் வருவேனா என்று எனக்கு தெரியாது.

மன உளைச்சலாக இருக்கிறது என்று கூறி கதறியழுதார். அவர் கடைசியாக என்னிடம் பேசியது இதுதான். என்னை இரவு 9 மணிக்கு சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இவ்வாறு ஹம்சலா தெரிவித்துள்ளார். ஹம்சலா தெரிவித்துள்ள புகார்கள் குறித்து, சிபிசிஐடி போலீசார் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு எனது கணவரை கொண்டு சென்ற போது, நான் மீண்டும் வருவேனா என்று எனக்கு தெரியாது. மன உளைச்சலாக இருக்கிறது என்று கூறி கதறியழுதார்.

Related Stories: