திருவண்ணாமலையில் நீர்நிலை, வயல்வெளிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி : வெளிநாட்டு பறவைகள் வருகை

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நீர்நிலை, வயல்வெளிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. அப்போது, வெளிநாட்டு பறவைகள் திருவண்ணாமலை பகுதிக்கு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பறவைகளின் தற்போதய நிலை, பரவல், இடம் பெயர்வு குறித்து ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாட்களில் பறவை ஆர்வலர்கள் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. தங்களுடைய குடியிருப்பு பகுதி, வயல்வெளிகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகள், வனப்பகுதி போன்ற இடங்களில் காணப்படும் பறவைகளின் விபரங்களை www.ebirdindia.org என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அதன் மூலம், நாடு முழுவதும் பறவைகளின் நிலை குறித்து ஆவணமாக பதிவு செய்யப்படுகிறது. சூழலியலின் சுட்டிக்காட்டி என பறவைகளை அழைப்பது உண்டு. பறவைகள் எந்த பகுதியில் அதிகம் வாழ்கிறதோ, அந்த பகுதி மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் நல்ல நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்யலாம்.

எனவே, பறவைகளின் இடப்பெயர்வு காலமான (வலசை) தை மாதத்தில், இந்த கணக்கெடுப்பு பறவை ஆர்வலர்கள் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை திருவண்ணாமலை பகுதியில் பறவை ஆர்வலர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு, அதன் விபரங்களை உரிய இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். அதன்படி, திருவண்ணாமலை அடுத்த கீழ்நாத்தூர் ஏரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவைகள் மற்றும் சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 5 பறவைகள் அடையாளம் காணப்பட்டது.

இதுகுறித்து பறவை ஆர்வலரும், ஆய்வாளருமான குமார் கூறுகையில், ‘பறவைகள் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் இளைய தலைமுறையிடம் ஏற்படுத்தவும், பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இதுபோன்ற தன்னார்வ கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இது ஒரு மக்கள் அறிவியல் திட்டமாகும். மேலும், நல்ல பொழுதுபோக்காகவும் அமையும். குளிர் பருவத்தில் பறவைகள் வட திசையில் இருந்து தென் திசை நோக்கி இடம் பெயரும்.

எனவே, இந்த காலகட்டத்தில் பறவைகளின் விபரங்களை உற்றுநோக்கி அவற்றை பட்டியலிடுவது எளிது. அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள கீழ்நாத்தூர் ஏரியில் இம்முறை கரிச்சான், பனங்காடை, மைனா, சில்லை, புள்ளி ஆந்தை, செம்பூத்து போன்ற 46 உள்ளூர் பறவைகள் கண்டறியப்பட்டு, பறவைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதேபால் சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து தென் திசை நோக்கி வந்த பட்டாணி உப்புக்கொத்தி, பொறி உள்ளான், கதிர் குருவி, பழுப்பு கீச்சான், மஞ்சள் வாலாட்டி ஆகிய 5 பறவைகள் அடையாளம் காணப்பட்டது. இனபெருக்கத்துக்காவும், உணவுக்காகவும், பறவைகள் கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்வதும், உள்நாட்டுக்குள் இடம் பெயர்வதும் பறவைகளின் வழக்கம். அதன் வழித்தடத்தில் இந்த பயணம் ஆண்டுதோறும் நடக்கும்’ என்றார்.

Related Stories: