பைப் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் 4 பேர் நீக்கம்: 13 வது நாளாக போராட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பைப் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13வது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள பைப் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2ம்தேதி தொழிற்சாலை நிர்வாகம் 4 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் இவர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் நிர்வாகம் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து இன்று 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், தொழிலாளர்களுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனார் தெரிவித்துள்ளார். இதற்கு தொழிலாளர்கள்,’’சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள், தொழிலாளர்கள் முன்பு பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்.இல்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் கூறுகையில், ‘’திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நேரில் வந்து தொழிலாளர்கள் பிரச்னையை முடித்து வைக்கவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: