இறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு

நன்றி குங்குமம் தோழி

சரண்யா - தேர்ட் ஐ ஆட்டிசம் பயிற்சி மையம்

‘‘சாலையில் பரட்டை தலை யுடன், அழுக்கு சட்டை அணிந்து கொண்டு எந்த ஒரு சலனமும் இல்லாமல் சுற்றித்திரிபவர்களை நாம் பார்த்து இருப்போம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களான இவர்களை பைத்தியம் என்று சொல்லி அவர்கள் குடும்பத்தினரே நிராகரித்து இருப்பார்கள். திக்கு திசை தெரியாமல் திரியும் இவர்களுக்கு சின்ன வயசில் ஆட்டிசம் பிரச்னை இருந்து இருக்கும். அதற்கான சிகிச்சையை சரியான முறையில் மேற்கொள்ளாமல் இருந்து இருப்பார்கள். விளைவு அவர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்’’ என்கிறார் சரண்யா ரங்கராஜ்.

பொள்ளாச்சியை சேர்ந்த இவர், கடந்த ஏழு வருடமாக ஆட்டிசம் குழுந்தைகளுக்கான பயிற்சி மையம் ஒன்றை அமைத்து அதனை நிர்வகித்து வருகிறார். இவரின் அம்மா வனிதா ரங்கராஜ், கடந்த இருபது வருடமாக ‘சரணாலயம்’ என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அங்கு ஆதரவற்றவர்கள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாலையில் திரிந்தவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களை பாதுகாத்து அவர்களுக்கான ஒரு வாழ்க்கையினை அமைத்து தருகிறார்.

‘‘அம்மா தான் முதலில் ‘சரணாலயத்தை’ ஆரம்பிச்சாங்க. அப்ப நான் படிச்சிட்டு இருந்தேன். எம்.பி.ஏ முடிச்ச கையோடு கல்யாணமாகி அமெரிக்காவிற்கு போயிட்டேன். அங்க நாலு வருஷம். அதன் பிறகு லண்டனுக்கு போயிட்டோம். அங்கு சில காலம் வேலைப் பார்த்தேன். அந்த சமயத்தில் தான் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் நானும் என் கணவரும் அங்கு வேலையை ராஜினாமா செய்திட்டு, கோவையில் வந்து செட்டிலாயிட்டோம். அம்மாவுடன் நானும் அவங்க தொண்டு நிறுவனத்தில் உதவியாக இருந்தேன். அந்த சமயத்தில் தான் ஆட்டிசம் குறித்து பெரிய மையம் எதுவும் இங்கில்லை என்று தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவங்களுக்கு என பல காப்பகம் உள்ளது.

ஆட்டிசத்திற்கு என சிறப்பு பள்ளிகள் தனியாக இல்லை. அனைத்து குறைபாடுகளுக்கு ஏற்பதான் பள்ளிகள் அமைக்கப்பட்டு இருக்கு. அப்படியே இருந்தாலும் முறையான பயிற்சிகளுடன் இருப்பதில்லை. அது தான் என்னை யோசிக்க வச்சது. அவங்களுக்காகவே ஒரு சிறப்பு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ‘தேர்ட் ஐ’ என்ற பெயரில் ஒரு மையத்தை ஆரம்பிச்சேன்’’ என்றவர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு கவனம் அவசியமாம். ‘‘பொதுவாகவே இது போன்ற சிறப்பு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சிறப்பு ஆசிரியர்கள் இருப்பாங்க. அதற்காகவே அவங்களை நியமனம் செய்திருப்பாங்க. அவர்களும் மற்ற குறைபாடு உள்ளவர்களை எப்படி கையாள்கிறார்களோ அப்படித்தான் இவங்களையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பலருக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வே இல்லை. நான் ஆரம்பித்த போது, நானும் சிறப்பு ஆசிரியர் கொண்டு தான் என்னுடைய மையத்தை நடத்தி வந்தேன். ஆனால் எனக்கு இவர்களுக்கு என தனித்தன்மையான பயிற்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினேன். அது குறித்த தேடலில் இறங்கிய போது தான், அமெரிக்காவில் ‘அப்பைலட் பிகேவியர் அனாலிசஸ்’ என்ற சிறப்பு பயிற்சி இருப்பது குறித்து தெரிய வந்தது. அதனால் நான் அமெரிக்கா சென்று இரண்டு வருஷம் இதற்கான பயிற்சியினை எடுத்துக் கொண்டேன். ‘அமெரிக்கன் போர்ட் சர்டிபைட் அசிஸ்டென்ட் பிகேவியர் அனெலிஸ்ட்’ என்ற பட்டம் பெற்றதில் நானும் ஒருவர். மேலும் குழந்தைகளை கையாள வேண்டும் என்பதால் உளவியல் சார்ந்த படிப்பும் படிச்சேன்.

படிப்பை முடிச்ச கையோடு கோவையில்தான் முதன் முதலில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான தெரபியினை ஆரம்பிச்சேன். தற்போது கோவையில் மட்டும் இரண்டு மையங்கள், பொள்ளாச்சியில் ஒன்று மற்றும் கிணத்துக்கடவில் ஒன்று என்று இயங்கி வருகிறது. இதில் பொள்ளாச்சியில் இயங்கி வரும் மையம் மட்டுமே வசதி இல்லாதவர்களுக்காக இயங்கப்படுகிறது. இங்கு அவர்களுக்கு அனைத்து தெரபியும் இலவசமாக வழங்கி வருகிறோம்’’ என்றவர் ஆட்டிசம் பற்றி விவரித்தார்.

‘‘ஆட்டிசம், யாருக்குமே புரியாத விஷயம். இதில் பாதிக்கப்பட்டவங்க என்ன யோசிக்கிறாங்க, நினைக்கிறாங்கன்னு தெரியாது. இந்த குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றால், சின்ன வயசில் இருந்தே ஆரம்பிக்கணும்.

இல்லை என்றால் அவர்களின் நடத்தையில் பாதிப்பு ஏற்படும். மற்றவர்களை அடிப்பது, கடிப்பது மற்றும் தானாகவே பேசிக்கொள்வது போன்ற நடத்தையில் பிரச்னை ஏற்படும். மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு ஏதாவது ஒரு கைத்தொழில் சொல்லித் தரலாம். ஆனா இந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு விஷயமும் சொல்லித் தரணும். அதாவது அடிப்படை விஷயமான கழிவறை செல்வது கூட அவர்களுக்கு சொல்லித்தரணும். இல்லை என்றால் 20 வயதானாலும் அதை பழகிக்கொள்ள மாட்டாங்க. இதெல்லாம் தான் எனக்கு இவங்களுக்கான ஒரு மையம் ஆரம்பிக்கணும்ன்னு எண்ணம் ஏற்பட்டது. மேலும் மக்களுக்கு குறிப்பா ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தணும்.

ஆட்டிசம் பிரச்னையை ஒன்றரை வயதில் கண்டறியலாம். குழந்தைகளுக்கு பேச்சு திறன் பாதிக்கும் போதே அவர்களுக்கு பிரச்னை உள்ளதா என்று கண்டறிவது அவசியம். இவங்களுக்கு உடல் ரீதியா எந்த பிரச்னைகளும் இருக்காது. பார்ப்பதற்கும் சாதாரணமா தான் இருப்பாங்க. முகத்திலோ அல்லது உடல் ரீதியாக எந்த மாற்றமும் தெரியாது. ஆட்டிசம் இரண்டு வகைப்படும். ரிசெப்டிவ் கம்யூனிகேஷன். அதாவது நாம் சொல்வதை புரிந்து கொள்வார்கள். கையத்தட்டு என்றால் அதை செய்வாங்க. அடுத்து எக்ஸ்பிரசிவ் கம்யூனிகேஷன், பேசும் மொழி, உடல் மொழி, முகபாவங்கள் மற்றும் குரலின் தொனியைப் புரிந்து கொள்வார்கள். ஆனால் சமூக திறனில் இவர்களுக்கு குறைபாடு இருக்கும்.

அன்பை எவ்வாறு வெளிப்படுத்தணும்னு தெரியாது. பொம்மையை அடுக்கி வைக்க மாட்டாங்க. வெளியே செல்லும் இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ளணும்னு தெரியாது. ஒரு பொருளையும் அதற்கான வார்த்தையையும் இணைக்க தெரியாது. உதாரணத்திற்கு இது தான் தண்ணீர் என்று அவர்களுக்கு சொல்லத்

தெரியாது’’ என்றவர் இந்த குழந்தைகள் ‘செல்ப் இன்ஜுரல்’ நடத்தையால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். ‘‘பெரும்பாலும் என்னிடம் வரும் குழந்தைகளுக்கு எல்லாம் ஐந்து வயது கடந்து தான் வருவாங்க. அந்த வயதில் பேசவும் தெரியாது. செல்ப் இன்ஜுரல் நடத்தை அதிகமாக இருக்கும். அவர்களையே அடித்துக் கொள்வார்கள். அல்லது மற்றவர்களை அடிப்பார்கள்.

இந்த சமயத்தில் வரும் போது அவர்களின் நடத்தையை மட்டுமே சரி செய்ய முடியும். அதுவும் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். இதுவே இரண்டரை வயதிற்குள் அவர்களுக்கு சிகிச்சை ஆரம்பித்தால் ஒழுக்க முறையை கடைப்பிடிக்க வைக்கலாம். சில குழந்தைகள் சாதாரண பள்ளிக்கு செல்லும் அளவுக்கு கூட தேறுவார்கள். எங்க மையத்தில் தெரபி மற்றும் சிறப்பு பயிற்சியும் இருக்கு. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் திறன் பொருத்து பயிற்சி அளிக்கப்படும். பெற்றோர்களுக்கும் இந்த பயிற்சி அளிப்பதால், அவர்கள் அதே முறையினை வீட்டிலும் கடைப்பிடிக்க வசதியாக இருக்கும். இது ஒரு குறைபாடு தான். முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையினை மாற்றி அமைக்கலாம்.

இதன் மூலம் அவர்களின் தேவை என்ன என்று வெளிப்படுத்துவார்கள். நடத்தையிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார்கள். சிலருக்கு தனித்திறமை இருக்கும்.

அதை அறிந்து அவர்களை வழிநடத்தலாம். எங்களிடம் பயிற்சி எடுத்த ஒரு ஆட்டிச குழந்தை படிப்பில் பெரிய அளவில் இல்லை என்றாலும், பாட்டுக் கச்சேரி செய்து வருகிறான்’’ என்றவர் இதனை பயிற்சியோடு நில்லாமல் அவர்கள் வாழ்க்கை முழுக்க ஒரு பாதுகாப்பு அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.

‘‘இந்த மையம் ஆரம்பிச்சு ஏழு வருஷமாச்சு. முதல்ல பொள்ளாச்சியில் வீட்டில் தான் ஆரம்பிச்சேன். அதன் பிறகு கிணத்துக்கடவில் பெரிய மையம் அமைத்தேன். இரண்டு வருஷம் முன்பு வரை கோவையில் வெறும் தெரபி மையம் மட்டும் ஆரம்பிச்சோம். இது தவிர கோவையிலும் மருத்துவ

மனையுடன் இணைந்தும் தெரபி கொடுக்கிறோம்.

கோவையில் ஆட்டிசம் குறித்த சிறப்பு பள்ளியும் உள்ளது. அடுத்த கட்டமாக இந்த குழந்தைகளுக்கான ஹாஸ்டல் ஒன்று துவங்கும் எண்ணம் உள்ளது. அடுத்து ரிடயர்மென்ட் வசதியுடன் கூடிய கேட்டெட் கம்யூனிட்டி. அங்கு குழந்தைகளுடன் பெற்றோர்களும் தங்கலாம். இதில் பெற்றோர்களுக்கு ஏதும் ஆனாலும் குழந்தைகளை அந்த கம்யூனிட்டி பார்த்துக் கொள்ளும். என்னைப் பொறுத்தவரை ஆரம்ப நிலை முதல் இறுதி நாட்கள் வரை அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஆட்டிசம் குறித்து பயப்பட தேவையில்லை. பெற்றோர்களுக்கு குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தான் அவர்களுக்கான பயிற்சி தள்ளிப் போகிறது. குறித்த வயதில் அவர்களுக்கு பயிற்சி அளித்தாலே போதும், அவர்களுக்கான திறனை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தினை மாற்றி அமைக்க முடியும்’’என்றார் சரண்யா.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: