தமிழகத்தில் ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை தரும் துறையாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாயை ஈட்டித் தரும் துறையாகவும் விளங்கும் ஜவுளி தொழில் கடும் நூல் விலை உயர்வு காரணமாக மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை தொழிலுக்கு புகழ்பெற்ற மாவட்டமான திருப்பூரில் 15,000 உற்பத்தி ஆலைகள் இயங்கி வருவதாகவும், கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இந்த தொழிலை நம்பி உள்ளனர். 2021-2021ம் ஆண்டு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்றாலும், ஜவுளி தொழில் சந்திக்கும் பிரச்னைகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி இறக்குமதி வரியை நீக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு.

எனவே, முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, ஜவுளி தொழிலில் நிலவும் பிரச்னைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தை அளித்து, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான வரியை நீக்கவும், ஏற்றுமதியை தடை செய்யவும் நடவடிக்கை எடுத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: