பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர்: டூ வீலரில் வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பி வந்தனர். இதனால், வழக்கத்தைவிட சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூ வீலர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையை தங்களது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக, சென்னையில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த சில தினங்களுக்குமுன் பஸ், ரயில், கார் மற்றும் பைக்குகளில் குடும்பம், குடும்பமாக சென்றனர். இதனால், வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.இந்த நிலையில், சொந்த ஊர்களில் பொங்கல் கொண்டாட்டம் முடிந்ததும் நேற்று அவர்கள் சென்னைக்கு திரும்பி வந்தனர். இன்று தைப்பூச விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் இன்று சென்னைக்கு வரவுள்ளதால், நேற்று குறைந்தளவே வாகனங்கள் வந்தன. ஆனால், பைக்குகளில் குடும்பத்துடன் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் டூ வீலர் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

இருப்பினும், செங்கல்பட்டு ஏஎஸ்பி அசிஸ் பச்சோரோ தலைமையில் போலீசார், பரனூர் சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘இன்று தைப்பூச விடுமுறை என்பதால், சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், நாளை முதல் ஏராளமானோர் வரும்போது பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’’ என்றனர்.

* இன்று 5,314 அரசு பஸ் இயக்கம்

பொங்கல் முடித்து திரும்புவோருக்காக இன்று 5,314 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று காலை முதல் நகர்புறங்களுக்கு மக்கள் புறப்பட்டதால் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பஸ் ஸ்டாண்டுகளில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் மீண்டும் நகர்புறங்களுக்கு திரும்பினர். இவர்களின் வசதிக்காக நேற்று தமிழகத்தில் முக்கிய இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் 5,655 என மொத்தம் 7,755 பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று புறப்பட்டு நகர்புறங்களுக்கு திரும்புவோருக்கு வசதியாக 2,100 தினசரி பஸ்களும், 3,214 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 5,314 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் நாளை 2,100 தினசரி பஸ்களும், 1,540 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 3640 பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

* டோல்கேட்டுகளில் நெரிசல்

சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்திலும் நேற்று வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து காத்திருந்தன. இதேபோல் மேம்பாலம் கட்டும்பணி, சாலை விரிவாக்கப்பணி நடைபெறும் இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. அவ்விடங்களில் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடி பயணித்தன.

Related Stories: