தொற்று அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் தகவல்

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூரில் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். 17 மாடி கட்டிடத்தில் இயங்கும் இந்த சிறப்பு மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், நோயாளிகளுக்கான வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். மேலும், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகள், மருத்துவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து, திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியில் செயல்படும் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா, ஒரு நாளைக்கு எத்தனை வீடுகளுக்கு செல்கிறீர்கள், இதுவரை மொத்தம் எத்தனை பயனாளிகள் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என்று கேட்டறிந்த அமைச்சர், அதுகுறித்த பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வாய்ப்புள்ள இடங்களில் கொரோனா கேர் சென்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது. மேலக்கோட்டையூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 1000 படுக்கைகள் கொண்ட மையமும், தையூரில் தொழிலாளர் நலத்துறை கட்டிடத்தில் 1000 படுக்கைகள் கொண்ட மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 48 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். சிறிய ஊரான மாம்பாக்கத்தில் செயல்படும் ஆரம்ப துணை சுகாதார நிலையம் மூலம் இதுவரை 770 பேர் பயன் பெற்றுள்ளனர்.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் கூடுதலாக தேவைப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரானை பொறுத்தவரை அதன் பாதிப்பு தமிழ்நாட்டில் குறைவாகத்தான் இருக்கிறது. இருப்பினும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி செயலாற்றி வருகிறோம். கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதே நமது. இலக்கு. இவ்வாறு அவர் கூறினார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பரணிதரன், துணை இயக்குனர் ஜீவா, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அருண்குமார், சுரேஷ், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: