மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டதால், கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால், கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். வடகிழக்கு பருவமழை பல மாநிலங்களில் முடிந்த நிலையில், தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை மழை பெய்தது. தொடர்ந்து, காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு பகுதிகளில் மழை பெய்தது. மாமல்லபுரம் மற்றும் கடற்கரை ஓட்டியுள்ள மீனவ குப்பங்களில் நேற்று 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.

குறிப்பாக, மாமல்லபுரம் குப்பம்,  கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம், தேவனேரி குப்பம், புதுஎடையூர் குப்பம், பட்டிபுலம் குப்பம், புதிய கல்பாக்கம் குப்பம், நெம்மேலி குப்பம், செம்மஞ்சேரி குப்பம் உள்ளிட்ட மீனவ குப்பங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு, பலத்த காற்று வீசியது. இதன்காரணமாக, நேற்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள், பலத்த காற்றால் மீன் பிடிக்க முடியாமல் அவசர அவசரமாக கரை வந்து சேர்ந்தனர். மேலும், கடலுக்கு, செல்லாத ஒரு சில மீனவர்கள் கரையில் இருந்தபடியே, கடலில் தூண்டில் போட்டு மீன்கள் பிடித்தனர். சுமார் 5 அடி உயரத்துக்கு ராட்சத அலை கரைப்பகுதி வரை நோக்கி வந்ததால், மீனவர்கள் கரைப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை பத்திரமாக எடுத்து, பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.

Related Stories: