கடுக்கலூர் ஊராட்சியில் ரூ.17.5 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

செய்யூர்: கடுக்கலூர் ஊராட்சியில் ரூ.17.5 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார மையம் கட்டுவதற்கான பணிகளை செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தொடங்கி வைத்தார். சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுக்கலூர் ஊராட்சியில் துணை சுகாதார மையம், கடந்த பல ஆண்டாக செயல்பட்டு வந்தது. இந்த சுகாதார மையத்தில் கடுக்கலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், இந்த மைய கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கட்டிடம் சுகாதார துறையினர் மூலம் இடிக்கப்பட்டது. அதன்பிறகு, இப்பகுதியில் புதிய சுகாதார மையம் கட்டிடம் அமைக்கப்படாமல் செவியர்கள் மட்டும் அவ்வப்போது கிராமம் கிராமாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிராம மக்கள் இதே பகுதியில் புதிய துணை சுகாதார மையம் கட்டிதர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, சுகாதார மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு சார்பில்  ரூ.17.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் சித்தாமூர் ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை,  ஒன்றிய செயலாளர் சிற்றரசு, திமுக இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், நிர்வாகிகள் சூனாம்பேடு வரதராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூ. க. ஆதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: