ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி ஓமன் சென்றது இந்திய அணி

மஸ்கட்: ஓமனில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் அணி மஸ்கட் சென்றடைந்தது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஜன.21-28 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் அணிகளும், பி பிரிவில் சீனா, கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா அணிகளும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் (ஜன.21) மலேசியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஜன.23ம் தேதி ஜப்பானுடனும், ஜன.24ம் தேதி சிங்கப்பூருடனும் மோதுகிறது. அரையிறுதி ஆட்டங்கள்  ஜன.26ம் தேதியும், பைனல் ஜன.28ம் தேதியும் நடைபெறும். இத்தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஸ்பெயின் மற்றும் ஹாலந்தில் நடைபெறும் உலக கோப்பையில் விளையாட தகுதி பெறும். ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக, கோல்கீப்பர் சவீதா தலைமையிலான இந்திய அணி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி நேற்று அதிகாலை ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றடைந்தது.

Related Stories: