ஈகோ வேண்டாம் கோஹ்லி... கபில் அட்வைஸ்

புது டெல்லி: இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள விராத் கோஹ்லி, தனது ஈகோவை கைவிட்டு இளம் வீரர்கள் தலைமையில் முழு ஈடுபாட்டுடன் விளையாட முன்வர வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள கோஹ்லி (33 வயது), தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததை அடுத்து பதவி விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்குப் பின்னர் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் கோஹ்லிக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல்கள் உலா வந்த நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் ஷர்மா பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த குழப்பமான சூழ்நிலையில் தான், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோஹ்லி விலகியுள்ளார். இந்த சர்ச்சை குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது: கோஹ்லியின் முடிவை வரவேற்கிறேன். அவர் தற்போது சற்று நெருக்கடியான தருணத்தை எதிர்கொண்டுள்ளார். கோஹ்லி தனது ஈகோவை கைவிட்டு இளம் வீரரின் தலைமையில் முழு அர்ப்பணிப்புடன் விளையாட முன்வர வேண்டும்.

அது அவருக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டுக்கும் உதவிகரமாக இருக்கும். புதிய கேப்டன் மற்றும் வீரர்களுக்கு கோஹ்லி ஆலோசனைகள் கூறி வழிநடத்தலாம். ஒரு பேட்ஸ்மேனாக அவரை நம்மால் இழக்க முடியாது. கவாஸ்கர் கூட எனது தலைமையின் கீழ் விளையாடி உள்ளார். நானும் கூட ஸ்ரீகாந்த், அசாருதீன் தலைமையில் விளையாடி இருக்கிறேன். எனக்கு எந்த வித ஈகோவும் கிடையாது. இவ்வாறு கபில் கூறியுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் பொறுப்புக்கு ரோகித், கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் ஆகியோரது பெயர்களை கிரிக்கெட் பிரபலங்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

Related Stories: