ஆந்திராவில் நேர்த்திக்கடன் செலுத்தும் போது ஆட்டுக்கு பதில் வாலிபரின் தலை துண்டிப்பு: குடிபோதை ஆசாமியால் விபரீதம்

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வலசப்பள்ளி கிராமத்தில் ஊர் கிராம தேவதை கோயில் உள்ளது. இக்கோயிலில் காணும் பொங்கல் பண்டிகையன்று ஆடு, கோழிகளை பலி கொடுப்பது வழக்கமாம். அதன்படி காணும் பொங்கல் நேற்றுமுன்தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஏராளமான ஆடு, கோழிகள் பலியிடப்பட்டது. அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக ஆடு ஒன்றை சுரேஷ்(35) என்பவர் பிடித்துக் கொண்டிருந்தார். மேலும், சலபதி என்பவர் குடிபோதையில் ஆடுகளை வெட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது போதையில் இருந்த சலபதி, ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை கத்தியால் ஓங்கி வெட்டினார். இதனால் கழுத்தில் பலத்த காயமடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், சுரேஷை உடனடியாக மீட்டு மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மதனபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சலபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: